Published : 24 Aug 2020 09:16 AM
Last Updated : 24 Aug 2020 09:16 AM
மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேச்சாவின் நடவடிக்கையால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதன் இணையதள பயிற்சிக் கூட்டம் மீது சமூக வலைதளங்களில் வெளியான இந்தி விவகாரம் மொழிப்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மத்திய ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி) அமைச்சகம் சார்பில் நாட்டின் அனைத்து மாநில யோகா பயிற்சியாளர்களுக்கான 3 நாள் தேசிய பயிலரங்கம் இணையவழியில் நடைபெற்றது. இதில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படித்த மருத்துவர்களும் இதில் பங்கேற்றனர். இவர்களில் தமிழகத்தில் இடம்பெற்ற 40 பேருக்கு இந்தி தெரியவில்லை என கூறப்படுகிறது. மற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் அல்லாமல் இந்தி மட்டுமே தெரிந்துள்ளது.
இச்சூழலில் பலரும் நடத்திய வகுப்புகளிலும் அதிகமாக இந்தி மொழியில் பேசியுள்ளனர். இறுதி நாள் கூட்டத்தில் ராஜேஷ் கொட்டேச்சாவும் (54) இந்தியில் பேசியுள்ளார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பலரும் அம்மொழி தெரியாததால் ஆங்கிலத்தில் பேசும்படி வலியுறுத்தியதை கண்டுகொள்ளவில்லை. இதுபோல கேட்டவர்களை ஒருகட்டத்தில் கூட்டத்தை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒரு மொழிப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, செயலாளர் ராஜேஷ் கொட்டேச்சாவை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் பலரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டதாரிகள் சங்கத்தின் (எனிக்மா) துணைத் தலைவர் டாக்டர் சவுந்தரபாண்டியன் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும் போது, "தேசிய அளவிலான கூட்டத்தில் அதிகமாக இந்தியில் பேசியது, 12- ம் வகுப்பு படித்த யோகா பயிற்சியாளருக்கும், ஐந்தரை வருடம் பயின்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கும் ஒன்றாகப் பயிற்சிஅளிப்பது உள்ளிட்ட பல தவறுகள் நடைபெற்றன. இதை எதிர்த்து கேட்டவர்களுக்கு பதில் அளிக்காததுடன் வெளியேறும்படியும், அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் செயலாளரால் மிரட்டப்பட்டனர்.
செயலாளர் பதவியில் வழக்கமாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அகற்றப்பட்டு, வெறும் ஆயுர்வேத மருத்துவரான கொட்டேச்சாவை நியமித்ததுதான் பிரச்சினை. இதனால், அவர் ஆயுர்வேதத்தையே அதிகம் ஊக்குவித்து மற்ற மருத்துவங்களை புறக்கணிக்கிறார். தமிழர் அதிகமுள்ள யோகா மற்றும் இயற்கைமருத்துவத்தில் இருந்து யோகாவை மட்டும் பிரிக்க முயல்கிறார். கரோனா தொடர்பான எங்கள் பணியை அவர் துளியும் அங்கீகரித்து பேசவில்லை.
இந்திய முறை சிகிச்சை மருத்துவத்தை நிர்வகிக்க சமீபத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதாவில் கொட்டேச்சா தலையிட்டதால் இயற்கை மருத்துவம் மட்டும் கழற்றி விடப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களில் ஆயுர்வேதாவிற்கு ரூ.3,000 கோடியும், மற்றவைக்கு சில நூறு கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல பிரச்சினைகளை தவிர்த்து, இந்தியில் பேசியது மட்டும் புகாராகி வெறும் மொழிப் பிரச்சினை என்றாகி விட்டது" என்றார்.
இதுபோன்ற புகார்கள் குறித்து ‘இந்து தமிழ்’ எழுப்பிய கேள்விகளுக்கு ஆயுஷ் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேச்சா பதிலளிக்கையில், "இந்தியில் கூறப்பட்ட உரை அப்படியே ஆங்கிலத்திலும் பேசப்பட்டது. எனது இணையதள பேச்சு மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு மொழிப்பிரச்சினையாக முன்னிறுத்தப்பட்டு தேச ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கப்படுகிறது. இதற்காக, எழுபதுக்கும் மேற்பட்ட வெளியாட்கள் திட்டமிட்டு புகுந்து இக்கூட்டத்தை பிரச்சினையாக்கி உள்ளனர். இதுபோன்றவர்களைதான் நான் வெளியேறும்படி கூறினேன்.
ஆயுர்வேதத்துக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு என்பது தவறான புகார். மருத்துவர்களால் எழுப்பப்பட்ட புகார்களை நான் வரவேற்கிறேன். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கூட்டம் யோகா பயிற்சியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் தனித்தனியாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும். நான் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் ஆதரவாளனாக இருப்பதில் தவறு இல்லை" என தெரிவித்தார்.
குஜராத்தைச் சேர்ந்தவரான ராஜேஷ் கொட்டேச்சா, அம்மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது குஜராத்ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் விஜ்நான பாரதி அமைப்பின் ஆலோசகராக இருந்து அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்த்ததாக கொட்டேச்சாவிற்கு, பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள் ளது. இவரது அமைச்சகத்தின் 3 நாள் பயிலரங்கின் வீடியோ பதிவு அதன் இணையதளத்தில் நேற்று மதியம் திடீரென நீக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT