Published : 23 Aug 2020 06:41 PM
Last Updated : 23 Aug 2020 06:41 PM

ஒருங்கிணைந்த வலுவான தலைமை கொண்ட காங்கிரஸ் கட்சியே நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியும்: பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

காங்கிரஸ் தலைமையில் நேரு குடும்பத்தினரின் பங்களிப்பு நாட்டுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளது, எனவே பாஜக தலைமை தேஜகூவை முறியடிக்க இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து வலுவான தலைமையே சரி என்று பஞ்சாப் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் இன்று வெளியிட்ட அறிக்கையில் அமரீந்தர் சிங் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குக்காரணம் ஒருங்கிணைந்த வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததே. எனவே இந்த சமயத்தில் தலைமையை மாற்றி கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்ற சிந்தனை காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல்களையே தோற்றுவிக்கும். இந்தியா தற்போது எதிர்கொள்வது புற அபாயங்களை மட்டுமல்ல, இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு ஏற்பட்டுள்ள உள்ளார்ந்த அச்சுறுத்தல்களும்தான்.

ஒருங்கிணைந்த வலுவான தலைமையுடைய காங்கிரஸ்தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியும். பிரிட்டீஷாரிடமிருந்து சுத்ந்திரம் பெற்றது முதல் நேரு குடும்பத்தினரின் பங்களிப்பினால் நாடு முன்னேற்றப்பாதையில் வளர்ச்சிகண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேவையென்னவெனில் சிலர் விரும்பும் தலைவர் அல்ல, பலரும் நாடும் விரும்பும் தலைவர் தேவை. இதற்கு காந்தி குடும்பத்தினர் தலைமைதான் சரியாக இருக்கும்.

ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும். கட்சியை நடத்த அவருக்கு முழுத்திறமை இருக்கிறது. இந்த நாட்டில் அரசியல்சாசன கொள்கைகள், உரிமைகள், சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளை தூக்கிப் பிடித்து முன்னேறிச் செல்லும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிராமம் தோறும் உள்ளனர். இதற்கு காரணம் இந்திரா காந்தி குடும்பம்தான். இவர்களின் தியாகங்கள், பங்களிப்புகள்தான் பாஜகவுக்கு எதிராக பாறை போல் இருந்தன.

இந்தியாவின் அரசியலமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது ஒவ்வொரு காங்கிரஸ் ஆணும் பெண்ணும் இந்திரா காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக நிற்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நலன்களைத் தியாகம் செய்து நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் ஒற்றுமையுடன் வலுவான தலைமைக்கு ஆதரவளிக்க வேண்டும்.

தேர்தல் தோல்விகள் தலைமை மாற்றத்துக்கான அளவு கோல் அல்ல. இரண்டேயிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து இன்று பாஜக நாட்டையே ஆள்கிறது. அதே போல் காங்கிரஸ் மீண்டு எழும் அது காந்தி குடும்பத்தலைமை மூலம்தான் சாத்தியம்.

எனவே கட்சியை உடைக்கும் சக்திகள் மூலம் சர்வாதிகார சக்திகளை மறைமுகமாக வலுப்படுத்துவதுதான் நடக்கும், நம் முன்னோர்கள் கட்டமைத்த நவீன இந்தியாவை உலகம் போற்றுகிறது. அந்த கொள்கைகளை சுக்குநூறாக்கினால் அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல நாட்டுக்கே பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x