Published : 23 Aug 2020 05:17 PM
Last Updated : 23 Aug 2020 05:17 PM
அனைத்தும் நல்லபடியாகச் சென்றால், இந்தியா இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேசமயம், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 23 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆனால், கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலையில்தான் உள்ளன. இந்த ஆண்டு கிடைத்துவிடுமா அல்லது அடுத்த ஆண்டுதான் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா சமீபத்தில் கூறுகையில் “ இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களான பாரத் பயோடெக், ஜைடஸ் கெடிலா ஆகிய மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்து 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கிறது “ எனத் தெரிவித்தார்.
செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து இந்தியாவில் 2-வது மற்றும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை அடுத்தவாரத்திலிருந்து தொடங்குகிறது.
ஆனால், கரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை நிறைவு செய்ய 6 முதல் 9 மாதங்கள் தேவைப்படும். மத்திய அரசு அனுமதித்தால், விரைவாக அனுமதியளிக்க பரிசீலிக்கிறோம் என ஐசிஎம்ஆர் இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ அனைத்தும் நல்லபடியாகச் சென்றால், இந்தஆண்டு இறுதிக்குள் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து இந்தியாவுக்கு கிடைத்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
தனி இணையதளம்
கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு மட்டும் தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கும் பணியில் ஐசிஎம்ஆர் ஈடுபட்டு வருகிறது. அந்த இணையதளத்தில் கரோனா தடுப்பு மருந்து தொடர்பான விவரங்கள், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கரோனா தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் விதம், எங்கெங்கு தயாராகின்றன, ஆய்வுகளின் நிலை என்ன உள்ளிட்ட பல்ேவறு விவரங்களை அடங்கியதால் அந்த இணையதளம் இருக்கும்.
இந்த இணையதளம் ஆங்கிலம், இந்தி தவிர்த்து பல்வேறு பிராந்திய மொழிகளிலும் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த இணையதளத்தின் நோக்கம், அனைத்து மொழிகளிலும் வருவதன் மூலம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கரோனா தடுப்பு மருந்து குறித்த முழுமையான தகவலை பெற முடியும். இந்த இணையதளம் அடுத்த வாரத்திலிருந்து செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT