Published : 23 Aug 2020 11:20 AM
Last Updated : 23 Aug 2020 11:20 AM
திருவனந்தபுரம் விமாநிலையத்தை தனியாமர்மயமாக்கும் ஏலத்தில் அதானி குழுமத்துடன் நெருங்கிய தொடர்புடைய மற்றொரு நிறுவனத்துடன் கேரள அரசும் தொடர்பு வைத்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட ஒப்புதல் வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம் விமானநிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
திருவனந்தபுரம் விமாநிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் துணை நிற்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டு முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயமாக்குவதையும், அதானி குழுமத்துக்கு வழங்குவதையும் நாங்களும் எதிர்க்கிறோம்.
ஆனால், அதானி குழுமத்தின் தலைவர் அதானியின் நெருங்கிய உறவினர் நடத்தும் சட்ட நிறுவனமான சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்திடம் கேரள அரசு ஏலம் விவகாரத்தில் ஆலோசனை கேட்டுச் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.
இந்த சந்தேகம் உண்மையென்றால், அதானி குழுமத்துக்கும், கேரள அரசுக்கும் இடையிலான தொடர்பு இருப்பதாக வெளிப்படும்.
விமானநிலையத்தை ஏலம் எடுக்கும் போட்டியாளர்களில் கேரள அரசுடன் சேர்ந்து மிகப்பெரிய அதானி குழுமும் போட்டியிட்டது. ஆனால், அதானி குழுமும், கேரள அரசும், தங்களின் சட்ட ஆலோசனையை ஒரே நிறுவனமான சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்திடம்தான் பெற்றுள்ளன.
ஏலத்தின் முடிவில், அதானி குழுமம் வென்றதாக வெளியான செய்தி, தீவிரமான சந்தேகங்களையும், நம்பகத்தன்மை, தனியுரிமை ஆகிய கேள்விகளை எழுப்புகிறது.
இந்த முரண்பாடு இருக்கும் போது, எவ்வாறு அந்த சட்ட நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது குறித்து ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு விளக்க வேண்டும்.
வரும் 24-ம் தேதி சட்டப்பேரவையில் விமான நிலையம் விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்பாக இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து நிலையை தெளிவுபடுத்த அரசு முன்வர வேண்டும்
இவ்வாறு சென்னிதலா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியார்மயாக்குவதற்கு கேரள அரசு எதிர்ப்பதை பாஜக கண்டித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில் “ விமாநிலையம் அதானி குழுமத்துக்கு கிடைப்பதை மாநில அரசு எதிர்க்கிறது.
ஆனால், சட்டரீதியாக அவர்களுக்கு உதவிகிடைக்க கேரள அரசு துணை போகிறது. பினராயி விஜயன் ராஜினாமா செய்யக்கோரி 23-ம் தேதி(இன்று) உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்”
எனத்தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT