Published : 23 Aug 2020 10:40 AM
Last Updated : 23 Aug 2020 10:40 AM
காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பதவி குறித்து கடந்த சில வாரங்களாக எழுந்துள்ள சலசலப்பு, மூத்த தலைவர்கள், இளம் தலைவர்களுக்கு இடையிலான கருத்து மோதல் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட, காரியக் கமிட்டிக் கூட்டம் நாளை காணொலி வாயிலாகக் கூடி ஆலோசிக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உள்கட்சிப் பிரச்சினைகள் குறித்து முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முதல்வர்கள் என 20 முக்கியத் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நாளை காரியக் கமிட்டிக்கூட்டம் கூட்டப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் பிரியங்கா காந்தி அளித்த பேட்டி ஒன்றில் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தில் அல்லாத தலைவர்கள் வந்தாலும் பணி செய்யத் தயாராக நானும், சகோதரர் ராகுல்காந்தியும் இருக்கிறோம் எனத்தெரிவி்த்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஓர் ஆண்டுக்கு மேலாக இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தரமான தலைவர் நியமிக்கக் கோரி சசி தரூர் உள்ளிட்டோர் குரல் எழுப்பி இருந்தனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சியினனர் அனைவரும் ராகுல் காந்திதான் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் தலைமைப் பதவி குறித்து பல்வேறு சிக்கல்கள், குழப்பங்கள் நிலவுவதால், நாளைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்தில் ‘கட்சிக்குள் நிலையற்ற தன்மை நிலவுவதும், கட்சி பல்வேறு தருணங்களில் சறுக்கலை சந்திப்பதால் வேதனையுடன் உள்ளதாகத்’ தெரிவித்துள்ளனர்.
தற்போது கட்சி இருக்கும் நிலைகுறித்து நேர்மையாக சுயஆய்வு செய்ய வேண்டும், அனைத்தும் பொறுப்பு ஏற்கும் தலைமை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்கள் நம்பிக்கையிழந்து செல்வதால், அவர்களை நம்பிக்கையை மீட்டெடுக்க வலுவான தலைமை தேவை என்று தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு நிலையான முழுநேரத் தலைவர் இல்லாததால், கட்சி திசைதெரியாமல் செல்வது குறித்து மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையிலான மோதல் கூட பெரிய விரிசலாக விழுந்தது, அதன்பின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தலையி்ட்டபின் சச்சின் பைலட் சமாதானமாகினார். அடுத்ததாக பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது, அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் வரஉள்ளன. இதை எதிர்கொள்ள வலுவான தலைமை தேவை என்று இளம் தலைவர்கள் விரும்புகின்றனர்.
நாளை நடக்கும் கூட்டத்தில் உள்கட்சிச் சிக்கல், மூத்ததலைவர்கள், இளம்தலைவர்கள் இடையே மோதல் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படலாம். கடந்த 3 வாரங்களுக்கு முன் சோனியா காந்தி, கட்சியின் எம்.பி.க்களுடன் காணொலி மூலம் நடத்திய ஆலோசனையில் மூத்த தலைவர்கள் மீது இளம் தலைவர்கள் குற்றம்சாட்டினர். பதிலுக்கு மூத்த தலைவர்களும் பேசியதால் சலசலப்பு நிலவியதாகக் கூறப்பட்டதே காரணமாகும்..
மேலும், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கு 73 வயதாகிறது. தன்னுடைய உடல்நிலை கருதி அவர் தொடர்ந்து தலைமைப் பதவியில் இருக்க அவருக்கு விருப்பமில்லை எனவும் கூறப்படுகிறது.
தற்போது ராகுல்காந்திதான் மீண்டும் தலைவராக வேண்டும் என கட்சியின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் வலுவாக குரல் கொடுத்து வருவதால் நாளை முக்கியமாக இதுகுறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயாளர் கே.வேணுகோபால் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு காணொலி மூலம் கூட உள்ளது. அனைத்து நிரந்தர உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT