Last Updated : 22 Aug, 2020 11:15 AM

 

Published : 22 Aug 2020 11:15 AM
Last Updated : 22 Aug 2020 11:15 AM

மகாராஷ்டிராவில் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடங்கியது; கரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள்: வழக்கமான உற்சாகம் இல்லை

மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலில் இன்று காலை பூஜை நடந்த காட்சி: படம்| ஏஎன்ஐ

மும்பை

மகாராஷ்டிர மாநிலத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று தொடங்கியது. கரோனா வைரஸ் பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வழக்கமாகக் காணப்படும் உற்சாகம் இந்த ஆண்டு இல்லை.

கரோனா வைரஸ் பரவலால் கடும் கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் அறிவித்துள்ள மகாராஷ்டிர அரசு 2 அடி முதல் 4 அடிக்குள்ளாகவே விநாயகர் சிலையை வைக்க வேண்டும், விநாயகர் சிலையைக் கரைக்கும் ஊர்வலம் கிடையாது என்று தெரிவித்திருந்தது. இதனால், அனைத்து சமூகத்தினர் சார்பில் மும்பையில் வைக்கப்படும் விநாயகர் சிலையின் உயரம் 4 அடி உயரத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் உற்சாகத்தை மக்கள் குறைத்துக்கொள்ள மனமில்லை. மும்பை தாதர், சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் இன்று காலை முதலே மக்கள் வந்து, வீட்டில் வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலையை வாங்கிச் சென்றனர். ஆனால், வழக்கமான கூட்டம் இல்லை.

டெல்லி துவாரகாவில் உள்ள விநாயகர் சிலைக்கு பூஜை நடந்த காட்சி.

கரோனா வைரஸ் பரவலால், கூட்டம் காரணமாக பொது இடங்களுக்கு செல்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் பூக்கள் வியாபாரம், இனிப்பு பலகாரங்கள் வியாபாரம், அலங்காரப் பொருட்கள், பூஜைப் பொருட்கள் ஆகியவற்றின் வியாபாரம் மிகவும் மந்தமாகவே காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விநாயகர் சிலை செய்யும் தொழில்களும், கைவினைக் கலைஞர்களின் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்னன.

மும்பையில் மிகவும் புகழ்பெற்ற லால்பாகுஜா ராஜா சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலை இந்த முறை கரோனா வைரஸால் வைக்கப்படவில்லை. மும்பையில் மிகவும் பணக்கார சமூகமாகக் கருதப்படும் வதாலா ஜிஎஸ்பி சேவா சமிதி சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலையும் வைக்கப்படவில்லை.

விநாயகர் சதுர்த்தியன்று நடத்தப்படும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு கரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் வழக்கமாக இருக்கும் அலங்காரம், தோரணங்கள், பூக்கள் அலங்காரம் ஆகியவை விநாயகருக்கு இந்த முறை இல்லை.

நாக்பூரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட காட்சி.

மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளன. மும்பையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விநாயகர் சிலைகளையும், வழிபாட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். மும்பை நகரின் சில இடங்களில் பட்டாசு வெடித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.

முதல்வர் உத்தவ் தாக்கரே தனது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை இன்று காலை வைத்து வழிபட்டார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர்.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் கொண்டாடப்படுவதையொட்டி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிவிரைவுப் படை, 3 கம்பெனி ரிசர்வ் போலஸார், ஆயுதப்படை, கலவரம் கட்டுப்படுத்தும் படை, வெடிகுண்டு செயலிழக்கும் படை, தீவிரவாத தடுப்புப் படை ஆகியவை இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையில் கண்காணிப்புக்காக 5 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x