Published : 21 Aug 2020 11:37 AM
Last Updated : 21 Aug 2020 11:37 AM
தெலங்கானா மாநில அரசுக்கு உட்பட்ட ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் நீர் மின் உற்பத்தி திட்டத்தி்ல் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது.
கிருஷ்ணா நிதியின் மீது ஸ்ரீசைலம் நீர் மின் உற்பத்தி திட்டம் அமைந்துள்ளது. ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த நீர்மின் திட்டத்தை தெலங்கானா மாநில மின் உற்பத்திக் கழகம் நடத்தி வருகிறது.
6 உற்பத்தி நிலையங்கள் மூலம் 900 மெவாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடரந்து மழை பெய்து வருவதால், தற்போது முழுவீச்சில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. அப்போது மின்நிைலயத்தில் 25 பேர் வரை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தீவிபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்து 16 ஊழியர்கள் வரை தப்பிவிட்டனர். ஆனால், 9 பேர்வரை தீ விபத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கு மீட்புப்பணிக்கு செல்ல தீயணைப்பு படையினர் முயன்றாலும், கடும் புகை மூட்டம் நிலவுவதால், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.முதல்வர் சந்திரசேகர் ராவ் மீட்புப்பணியை கண்காணிக்குமாறு தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா மாநில மின் உற்பத்திக் கழகத்தின் தலைமைப் பொறியாளர் பி.சுரேஷ் கூறுகையில் “ தீவிபத்து நடந்த போது 25 பேர் வரை இருந்துள்ளார்கள்.இதில் 16 பேர் வரை தப்பிவிட்டார்கள், 9 பேர் சிக்கி இருக்கிறார்கள். துணை பொறியாளர், இணைப் பொறியாளரும் சிக்கியுள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களின் முக்கிய நோக்கம் அவர்களை உயிருடன் மீட்பதுதான். அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நீர்மின் திட்ட குகைக்குள் செல்போன் இணைப்பு கிடைக்காது என்பதால், அவர்கள் செல்போன் கொண்டு செல்லவில்லை. மின்கசிவின் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இந்த தீவிபத்தால் மின்உற்பத்தி செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தீ அணைக்கப்பட்டாலும் கடுமையான புகைமூட்டம் இருப்பதால், உள்ளே சென்று மீட்புப்பணிகளைச் செய்ய முடியவில்லை. குகைக்குள்ளே அவசரவழி இருப்பதால், அதன் வழியே அவர்கள் தப்பிக்கலாம்” எனத் தெரிவித்தார்
தெலங்கானா மின்துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி கூறுகையில் “ போலீஸார், தீயணைப்புப் படையினர், அவசர சேவைப் படையினர் அனைவரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT