Published : 27 Sep 2015 10:33 AM
Last Updated : 27 Sep 2015 10:33 AM
பிஹார் தேர்தலில் லாலுவின் மூத்த மகளான மிசா பாரதி இந்த முறை போட்டியிடவில்லை. இவர் தனது குடும்பத்தினரின் வெற்றிக்கு உதவிட முடிவு செய்துள்ளார்.
எம்.பி.பி.எஸ். முடித்த மருத்துவரான மிசா பாரதி (40), கடந்த மக்களவை தேர்தலில் பிஹாரின் பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிட்டார். லாலு வின் முன்னாள் நெருங்கிய சகாவான ராம் கிருபால் யாதவை எதிர்த்து போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மிசா பாரதி தனது 2 சகோதரர்களுடன் சேர்ந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மிசா பாரதி கூறும்போது, “எனக்கு தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் இருக்கிறது. எனவே, இந்தமுறை சட்டப்பேரவைக்காக போட்டியிடும் எனது தம்பிகளின் வெற்றிக்கு உதவியாக இருப்பது எனது கடமையாகும். அன்றாடம் அவர்களுடன் அமர்ந்து கட்சியை எப்படி வழிநடத்துவது, தேர்தல் பிரச்சாரத்தை எப்படி கொண்டுசெல்வது என்று யோசனைகள் கூறி வருகிறேன்” என்றார்.
இவரது தம்பிகளான தேஜ் பிரதாப், தேஜஸ்வீ பிரசாத் ஆகிய இருவரும் முறையே பிஹாரின் மஹுவா மற்றும் ரகோபூர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் ரகோபூர், இவர்களது தாயும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி 4 முறை போட்டியிட்டு வென்ற தொகுதி ஆகும்.
ராப்ரி தேவியும் இந்தமுறை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் அவரும் மிசா பாரதியும் இணைந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ராஷ்ட்ரிய ஜனதா தள நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “குடும்ப வாரிசுகளை லாலுஜி வளர்த்து வருவதாக ஏற்கெனவே புகார் உள்ளது. இதனால் கட்சியில் புகைந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க ராப்ரி மற்றும் மிசாவுக்கு இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை. தேர்தலுக்கு பின் மிசா, தன் தாய் உறுப்பினராக இருக்கும் மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. ராப்ரி, மிசா ஆகிய இருவரும் எங்கள் கட்சிக்கு மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்காகவும் பிரச்சாரம் செய்வார்கள்” என்று தெரிவித்தனர்.
இந்த தேர்தலில் எந்த ஒரு குறிப் பிட்ட சமூகத்தினருக்காக அல்லாமல், இளைஞர்களை மையமாக வைத்து பிரச்சாரம் செய்யும்படி தனது தந்தையை வலியுறுத்தி வருகிறார் மிசா. பிஹார் வாக்காளர்களில் இளைஞர் களின் எண்ணிக்கை 3 கோடியாக இருப்பதே இதற்கு காரணம்.
சமீப காலமாக லாலு பேசும் மேடைகளில் மிசா பின்னணியில் இருந்து அவருக்கு உதவியாக இருக்கிறார். கடந்த மாதம் சோனியா மற்றும் நிதிஷ்குமாருடன் நடைபெற்ற பாட்னா பொதுக்கூட்டத்திலும் மைக் முன்பு பேசிக்கொண்டிருந்த லாலுவுக்கு துண்டுச்சீட்டுகளை அனுப்பினார் மிசா.
இதுகுறித்து லாலு கூறும்போது, “எனது மகள் மிசா எனக்கு மட்டுமின்றி கட்சியின் வளர்ச்சிக்கும் அதிகம் உதவி வரு கிறார்” என்று கட்சியினர் மற்றும் நண்பர்களிடம் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கடந்த 1999-ம் ஆண்டில் பிஹாரின் தகவல் தொழிநுட்ப பொறியாளரை மணந்த மிசாவுக்கு துர்கா பாரதி (12), கௌரி பாரதி(6) என 2 மகள்கள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT