Published : 21 Aug 2020 07:57 AM
Last Updated : 21 Aug 2020 07:57 AM

பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு நடத்த தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க முடிவு: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கோப்புப் படம்

புதுடெல்லி

வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் பணியாளர்களை நியமிக்க தேசிய பணியாளர் தேர்வு முகமை (என்ஆர்ஏ) என்ற புதிய அமைப்பை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தற்போது வங்கிகள், ரயில்வே உட்பட மத்திய அரசின்பல்வேறு துறை பணிகளுக்குஅவற்றுக்கென உள்ள தேர்வுஅமைப்புகள் தனித்தனியாக தேர்வுகளை நடத்தி வருகின்றன. வேலை தேடுபவர்களும் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக் கட்டணத்தையும் தனித்தனியாக செலுத்துவதால், அவர்களுக்கு செலவு அதிகரிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுத வேண்டி இருப்பதால், அவர்களுக்கு பயணச் செலவு ஏற்படுவதுடன், நேரமும் வீணாகிறது.

இதை கருத்தில்கொண்டு, பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கு பொதுவான ஒரே தகுதிதேர்வு மூலம் ஆள் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தேசிய பணியாளர் தேர்வு முகமையை (என்ஆர்ஏ) அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த
தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு துறைகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்குப் பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. வேலை தேடுபவர்கள் பொதுவான ஒரே தகுதித்தேர்வு எழுதினால் போதும். இதனால், எண்ணற்ற தேர்வுகளை எழுதுவதால் ஏற்படும் செலவையும், நேர விரயத்தையும் மிச்சப்படுத்தலாம்.

பல ஆண்டுகளாக இளைஞர்கள் மத்திய அரசுக்குஇந்த கோரிக்கையை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ஆர்ஏ சார்பில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் ஊரகப் பகுதிகளில்உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் அதிக பலன் கிடைக்கும். அவர்கள் எளிதில் தேர்வு மையங்களுக்கு செல்ல முடியும். மத்திய அரசின் 20 துறைகளுக்கு இதன்மூலம் ஆட்கள் தேர்வு செய்து நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “ஆண்டுக்கு 2 முறை என்ஆர்ஏ சார்பில் தேர்வுகள் நடத்தப்படும். பட்டதாரிகள், இன்டர்மீடியட், 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தேர்வுகள் நடத்தப்படும். தொடக்க காலத்தில் வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்தஎன்ஆர்ஏ மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

மத்திய அரசு பணிகளுக்காக ஆண்டுதோறும் 2.5 கோடிமுதல் 3 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். இவர்களுக்காக பொதுவான தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம் அவர்கள் ஒரே முறைதேர்வு எழுதினாலே போதும் என்றநிலை ஏற்படும். என்ஆர்ஏ தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதி, அடுத்த 3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இந்தி, ஆங்கிலம் மட்டுமல்லாமல் மேலும் 12 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படும்.

அநேகமாக அடுத்த ஆண்டில்இந்த என்ஆர்ஏ செயல்படத் தொடங்கும். இதன் தலைமையகம் டெல்லியில் அமையும்.எதிர்காலத்தில் தனியார் துறைகளையும் இந்த என்ஆர்ஏ-வில் சேர்க்கமாநில அரசுகள் ஆலோசிக்கலாம்” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x