Published : 20 Aug 2020 04:13 PM
Last Updated : 20 Aug 2020 04:13 PM
பிஎம் கேர்ஸ் நிதியின் செயல்பாடுகளை, நடைமுறைகளை எந்த விதத்திலும் கண்காணிக்க விடாமலும் நுண்ணாய்வு செய்ய விடாமலும் பாஜக அரசு காக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிதியம் உருவான நாளிலிருந்தே பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இவை அனைத்துக்கும் பாஜக தரப்பும் பதிலளித்தும் வருகின்றது.
அது பொது அதிகாரத்தின் கீழ் வராது ஆகவே ஆர்டிஐ மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அதன் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டியதில்லை என்று பிரதமர் அலுவலகம் மறுத்து வருகிறது. அது பொது அதிகாரத்தின் கீழ் ஏன் வராது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி அதை மத்திய அரசுதான் உருவாக்கியிருக்கிறது என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் ப.சிதம்பரம் கூறும்போது, “எந்த ஒரு ஆய்வுக்கும் பிஎம் கேர்ஸ் நிதி நடைமுறைகளை உட்படுத்தி விடாமல் காக்க வேண்டும் என்று பாஜக அரசு செயல்படுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி பிஎம் கேர்ஸ் நிதி மத்திய அரசால்தான் உருவாக்கப்பட்டதா? அப்படி இல்லையெனில் யார் அதை எந்த அதிகாரத்தின் கீழ் உருவாக்கினர்?
மத்திய அரசினால் பிஎம் கேர்ஸ் உருவாக்கப்படவில்லை எனில் பிரதமர் மற்றும் 3 அமைச்சர்கள் ஏன் அதன் நிர்வாகக் குழுவில் இருக்கின்றனர்? அவர்களை ட்ரஸ்டீக்களாக நியமித்தது யார்?
பொது அதிகாரத்தின் கீழ் வராத தனியார் நிதியம் என்றால் அதற்கு வரும் நன்கொடைகள் ஏன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியாகக் கருதப்பட வேண்டும். இதே போல் பிற தனியார் நிதி அறக்கட்டளைக்கு வரும் கார்ப்பரேட் நன்கொடைகளும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியாகக் கருதப்படுமா? என்று தொடர் ட்வீட்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நிறுவனச் சட்டத்தின் பிரிவில் முன் தேதியிலிருந்தே செல்லுபடியாகும் விதமாக பிஎம் கேர்ஸ் நிதியத்தை உள்ளே நுழைத்து கார்ப்பரேட் விவகார அமைச்சகம் திருத்தம் கொண்டு வர அதிகாரம் வழங்கியது யார்?
மற்ற தனியார் அறக்கட்டளை நிதியையும் நிறுவனச்சட்டத்தின் திருத்தத்தினுள் கார்ப்பரேட் அமைச்சகம் கொண்டு வருமா?
“முன் தேதியிட்ட வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தனியார் நிதிக்கு சாதகமாகச் செயல்படுவது மற்றவற்றுக்கு பாகுபாடு காட்டுவதாகும், இது நிச்சயம் கேள்விக்குட்படுத்தப்படும்” என்று தொடர் விமர்சனங்களை தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் ப.சிதம்பரம் எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT