Last Updated : 20 Aug, 2020 10:15 AM

5  

Published : 20 Aug 2020 10:15 AM
Last Updated : 20 Aug 2020 10:15 AM

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மன்மோகன் சிங் முன்வந்தார் ஆனால் ராகுல் காந்தி ஏற்க மறுத்துவிட்டார்:  காங்கிரஸ் கருத்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் தலைமை ஏற்றால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளதையடுத்து,காங்கிரஸ் கட்சிக்குள் தலைமைப்பதவி குறித்த சர்ச்சை உருவாகியுள்ளது.

ஆனால் பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்திதான் மீண்டும் தலைவராக வர வேண்டும் என ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வதுமுறையாக பதவி ஏற்றபோது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மன்மோகன் சிங் முன்வந்தார். ஆனால், ராகுல் காந்தி அதை ஏற்க மறுக்க மறுத்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில் “அடுத்த தலைமுறைக்கான அரசியல் கட்சித் தலைவர்கள்”என்ற நூலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அந்த நூலை அமெரிக்க கல்வியாளர்கள் பிரதீப் சிபர், ஹர்ஸ் ஷா ஆகியோர் எழுதி நேற்று வெளியிட்டிருந்தனர்.

அதில் “இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வேண்டும். இந்த விஷயத்தில் ராகுல் காந்தியுடன் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஏராளமான தலைவர்கள் தலைமைப் பவிக்கு தகுதியுைடயவர்களாக இருக்கிறார்கள். புதியதாக வரக் கூடிய தலைவர் என்னை அந்தமான் தீவுக்கோ அல்லது உத்தரபிரதேசத்துக்கோ கட்சிப் பணிக்கு அனுப்பினாலும் நான் ஏற்றுக் கொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோகில் அளித்த பேட்டியில் “ காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசு 2-வது முறையாகப் பதவி ஏற்றபோது பிரதமர் பதிவியிலிருந்து விலகுவதாக மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். ஆனால், அதை ராகுல் காந்தி ஏற்கவில்லை. பதவிக்காலத்தை தொடருங்கள் என விட்டுக்கொடுத்தார். ஆதலால் ராகுல் காந்தி எப்போதும் தலைமைப்பதவிக்காகவும், எந்த பதவிக்காகவும் காத்திருந்தது இல்லை.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள தொண்டர்கள் ஒவ்வொருவரும் ராகுல் காந்திதான் மீண்டும் தலைவராக வர வேண்டும் என விரும்புகின்றனர். கட்சிக்கு யார் தலைவராக வருவது குறித்து காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் குழுதான் முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நேரு காந்தி குடும்பம் அதிகாரத்தின் மீது ஆசைப்படாமல், ஒன்றாக இணைந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளார்கள்.

2004-ம் ஆண்டு சோனியா காந்தி மிகப்பெரிய உதாரணம். பிரதமராக வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பைத் தியாகம் செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று துணிச்சலுடன் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்து போராடி வருகிறரர். தனது துணிச்சலையும், அச்சமில்லா நிலையையும் தொண்டர்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார். மத்தியில் ஆளும் மோடி அரசின் தோல்விகள், பின்னடைவுகளை நாள்தோறும் எடுத்துவைத்து ராகுல் காந்தி அயராது போராடி வருகிறார் என்பதை லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் பார்த்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு சமரசமில்லாத துணிச்சலும், அச்சமில்லாத நிலையும்தான் தற்போது தேவை, தொண்டர்கள் அதைத்தான் மதிக்கிறார்கள், தேசத்துக்கும் தேவை

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x