Published : 20 Aug 2020 08:19 AM
Last Updated : 20 Aug 2020 08:19 AM
கரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் பொதுவெளியில் வரும் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், ஊர்வலமாக சிலைகளை கொண்டு செல்லவும் மாநகராட்சி தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெங்களூரு விநாயகர் சதுர்த்தி சமிதி முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து அனுமதி கோரியது.
இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட வேண்டும். பொது இடங்களில் 4 அடி உயரத்துக்கும் குறைவான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும். வீடு மற்றும் அலுவலகங்களில் 2 அடி உயரத்துக்கும் குறைவான விநாயகர் சிலையை வைக்கலாம். ஒரு கிராமத்துக்கு ஒரு இடத்தில் மட்டுமே விநாயகர் சிலையை வைக்க வேண்டும். நகரங்களில் ஒரு வார்டுக்கு ஒரு இடத்தில் சிலை வைக்கலாம். இதற்காக விநாயகர் சதுர்த்தி குழுவினர் உள்ளூர் நிர்வாகிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. ஊர்வலமாக கொண்டு செல்லவும் அனுமதி இல்லை.
கரோனா பாதிப்பின் காரணமாக பொதுவெளியில் சிலை வைக்கும் இடத்தில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கூட வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிராமப்புறங்களில் ஏரி, குளங்களில் விநாயகர் சிலையை கரைக்கலாம்.
நகர்ப்புறங்களில் நடமாடும் வாகனங்களில் கொண்டு வரப்படும் தொட்டிகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். கரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் மக்களின் விருப்பத்துக்காக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT