Last Updated : 20 Aug, 2020 08:17 AM

1  

Published : 20 Aug 2020 08:17 AM
Last Updated : 20 Aug 2020 08:17 AM

தீவிரவாதிகளுக்கு மெடிக்கல் ஆப் தயாரித்த மருத்துவர் கைது

அப்துர் ரஹ்மானை

பெங்களூரு / புதுடெல்லி

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு 'மெடிக்கல் ஆப்' (மருத்துவ செயலி) தயார் செய்து கொடுத்ததாக பெங்களூருவில் மருத்துவர் அப்துர் ரஹ்மானை (28) தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் கண் மருத்துவராக பணியாற்றியவர் அப்துர் ரஹ்மான் (28). இவருக்கு தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததால் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை இரவு பசவன்குடியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவின் செய்தித் தொடர்பாளர் சோனியா நரங், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் அங்குள்ள ஜாமியா நகரில் வசித்த ஜஹான்சயிப் ஷமி வாணி, அவரது மனைவி ஹினா பஷீர் பீக்கை கைது செய்தனர். காஷ்மீரை சேர்ந்த அவர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ கிளை அமைப்பான ஐஎஸ்கேபி-வுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

ஜஹான்சயிப் ஷமி வாணி அளித்த தகவலின் அடிப்படையில் புனேவில் வசித்த ஷாதியா அன்வர் ஷேக் மற்றும் நபீல் சித்திக் காத்ரி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றிய அப்துர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜஹான்சயிப் ஷமி வாணி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அப்துல்லா பஷீத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அப்துர் ரஹ்மானுக்கு ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்கேபி அமைப்புகளுடன் நேரடி தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்துர் ரஹ்மானுக்கு சொந்தமான 3 இடங்களில் அதிகாரிகள் இரு நாட்கள் சோதனை நடத்தினர். முக்கிய தகவல்களை உள்ளடக்கிய லேப் டாப், கணினி, டிஜிட்டல் சாதனங்கள், செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இவர், அந்த அமைப்புக்கு மருத்துவ பயன்பாடுகள் நிறைந்த செயலியை (மெடிக்கல் ஆப்) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்துர் ரஹ்மான் 2014-ல் சிரியாவில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மருத்துவ முகாமுக்கு சென்று சிகிச்சைக்கு உதவியுள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளார். தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்கேபி தீவிரவாத அமைப்புகளின் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சோனியா நரங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x