Last Updated : 19 Aug, 2020 06:23 PM

1  

Published : 19 Aug 2020 06:23 PM
Last Updated : 19 Aug 2020 06:23 PM

கரோனா அச்சத்தால் ஆம்புலன்ஸூம் உறவினர்களும் உதவவில்லை; கொட்டும் மழையில் தந்தையின் சடலத்தை சைக்கிளில் கொண்டு சென்ற மகன்: கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பெங்களூரு

கர்நாடகாவில் கரோனா அச்சத்தின் காரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், உறவினர்களும் உதவாததால் இறந்த தந்தையின் சடலத்தை மகன் கொட்டும் மழையிலே இடுகாட்டுக்குச் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி அருகேயுள்ள எம்.கே.ஹுப்பள்ளியை சேர்ந்தவர் சாதெப்பா சளகர் (71). இவருக்கு கடந்த வாரம் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கிராம சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் பெலகாவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

மறுநாள் அங்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே சாதெப்பா சளகர் மரணம் அடைந்தார். அவர் கரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததால் மருத்துவமனை ஊழியர்களும் உறவினர்களும் பீதி அடைந்தனர்.

இதனால் குடும்பத்தினர் இடுகாட்டுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரியுள்ளனர்.

ஆனால் கிட்டூரில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கரோனா பரவும் என்கிற அச்சத்தால் எம்.கே.ஹூப்பள்ளிக்கு வர மறுத்துவிட்டார். சாதெப்பா சளகரின் உறவினர்களும் அதே காரணத்தினால் அவரது உடலை பார்க்கக் கூட வரவில்லை.

பெலகாவியில் பருவமழை விடாமல் பெய்ததால் உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உடலை விரைவில் அடக்கம் செய்யுமாறு அழுத்தம் தரப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் வருத்தம் அடைந்த சாதெப்பா சளகரின் மகன் சோமப்பா தன் தந்தையின் உடலை பாலித்தீன் பையால் மூடி சைக்கிளில் வைத்து 2 கிமீ தூரம் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றார்.

அவருக்கு உறவினர்கள் யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் நண்பர் காஞ்சப்பா இறுதிவரை உடன் இருந்துள்ளார். இருவரும் பாதுகாப்புக் கவசம் அணிந்தவாறு இடுகாட்டுக்குக் கொண்டு சென்று சாதெப்பா சளகரின் உடலை அடக்கம் செய்தனர்.

கொட்டும் மழையில் சைக்கிளில் சடலத்தைக் கொண்டு செல்லுகையில் உறவினர்கள் அதை செல்போனில் படம் எடுக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x