Published : 19 Aug 2020 10:54 AM
Last Updated : 19 Aug 2020 10:54 AM
லாக்-டவுன் காரணமாக ஏப்ரல்-ஜூலையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தகவல் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் பணியிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதே காலக்கட்டத்தில் அமைப்புசாரா மற்றும் நிரந்தர சம்பளம் இல்லாத துறைகளில் சற்றே முன்னேற்றம் தெரிகிறது என சி.எம்.ஐ.இ.தகவல் கூறுகிறது. ஜூலையில் 325.6 மில்லியன் பேருக்கு வேலை கிடைத்துள்ளது, கடந்த ஆண்டு ஜூலையை விட இது 2.5% அதிகம்.
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12 கோடியே 15 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதில், சிறு வணிகர்கள், தினக்கூலிகள், தெருவில் கூவி விற்பவர்களில் 9 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. “வேலைவாய்ப்பில் இந்தப்பிரிவுதான் 32% கொண்டது. ஆனால் இதுதான் ஏப்ரலில் 75% அடி வாங்கியது. இந்தப் பிரிவில் பலரும் வாழ்வாதாரங்களை இழந்தனர் என்கிறது சி.எம்.ஐ.இ.
ஆனால் ஏப்ரலில் வேலையிழந்த 91.2 மில்லியன் பேர்களில் மே மாதத்தில் 14.4 மில்லியன் பேருக்கும், ஜூன் மாதத்தில் 44.5 மில்லியன் பேர்களுக்கும் ஜூலையில் 25.5 மில்லியன் பேருக்கும் மீண்டும் வேலை கிடைத்துள்ளது. 68 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை இல்லாமல் உள்ளது.
ஆனால் லாக்டவுனினால் போன சம்பள ஊழியர்களின் வேலை திரும்புவது கடினம். ஏப்ரல் மொத்த வேலையிழப்புகளில் சம்பளம் வாங்குவோரின் வேலையிழப்புகள் 15% ஆக இருந்தது. பெரும்பாலும் நகரங்களைச் சேர்ந்தவர்களின் வேலை போயிருப்பதால் இது பொருளாதாரத்துக்கு கவலை அளிப்பதாகும். நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
2019-20ல் 8 கோடியே 60 லட்சம் சம்பள ஊழியர்களில் 58% நகரங்களில் வசிப்பவர்களே. ஆகவே இந்தத் துறையில் வேலையிழப்பு வாங்கும் திறனை குறைத்து பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும்.
ஜூலையில் வேளாண் துறையில் வேலை 126 மில்லியன்களாக அதிக அளவில் இருந்தது என்று சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT