Published : 18 Aug 2020 04:56 PM
Last Updated : 18 Aug 2020 04:56 PM
பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது மோசமான தந்திரங்கள் கொண்ட ராகுல் காந்தி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் செயல்பாட்டாளர்களுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அடி என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.
பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிஎம்கேர்ஸ் நிதியை தேசியப் பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட மறுத்து இன்று தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக் குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ட்விட்டரில் காங்கிஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் விமர்சித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பிஎம் கேர்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மோசமான வடிவமைப்பு கொண்ட ராகுல் காந்தி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் வாடகை செயல்பாட்டாளர்களுக்கும் கிடைத்த பெரும் அடி. காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களின் தவறான நோக்கம், தீங்கிழைக்கும் முயற்சிகளை மீறி உண்மை ஜொலிக்கிறது.
பிஎம் கேரஸ் நிதிக்கு பெரும் பங்களிப்புச் செய்த சமானிய மக்களால் ராகுல் காந்தியின் ஆவேசமான பேச்சு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் கூட தீர்ப்பளித்துவிட்டது. ராகுல் காந்தியும் அவரின் ‘வாடகை’ செயல்பாட்டாளர்களும் தங்கள் பாதையை இனி சரிசெய்வார்களா அல்லது மேலும் அவமானப்படப் போகிறார்களா?
காந்தியின் குடும்பம் பிரதமர் தேசிய நிவாரண நிதியை பல ஆண்டுகளாக தங்களின் தனிப்பட்ட உரிமைக்கானது எனக்கருதியது. மக்களின் கடின உழைப்பால் பிரதமர் தேசிய நிவாரண நிதி அளித்த பணத்தை அதன் குடும்ப அறக்கட்டளைகளுக்கு வெட்கமின்றி மாற்றியது. காங்கிரஸ் கட்சி தனது பாவங்களைக் கழுவுவதற்காக பி.எம் கேர்ஸுக்கு எதிராக திட்டமிட்டு அவமதிப்பு பிரச்சாரம் செய்கிறது என்பதை தேசம் நன்கு அறியும்
இவ்வாறு ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT