Published : 18 Aug 2020 03:45 PM
Last Updated : 18 Aug 2020 03:45 PM
இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் ஃபேஸ்புக் இந்தியா நிர்வாகம் தலையிடுவது குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு கடந்த 14-ம் தேதி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் நிர்வாகம் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர் பேசும் வெறுப்புப் பேச்சுகளை வேண்டுமென்றே தடை செய்வதில்லை, கண்டுகொள்வதில்லை. இதற்கு இந்திய ஃபேஸ்புக் நிர்வாகத்தில் இருக்கும் அன்கி தாஸ் பின்னணியில் இருக்கிறார் என்று தெரிவித்தது.
இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்த செய்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தியாவின் ஃபேஸ்புக் நிர்வாகத்தின் கொள்கை பிரிவுத் தலைவர் அன்கி தாஸ் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்கிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுகையில் “ இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் நிர்வாகம், இந்தியாவின் தேர்தல ்ஜனநாயகத்தில் தலையிடுகிறது. ஆதலால், உங்கள் நிர்வாகத்துக்குள் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை வழங்கிட வேண்டும். விசாரணையில் எந்தவிதத்திலும் தலையிடாத வகையில் புதிய ஃபேஸ்புக் குழுவை இந்தியாவுக்கு நியமிக்க வேண்டும்.
ஃபேஸ்புக் இந்தியா தலைமைக் குழு மீது விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை அமைப்பை ஃபேஸ்புக் தலைமை அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். அந்த விசாரணைஅறிக்கையை ஃபேஸ்புக் வாரியத்திடம் ஒன்று அல்லது இரு மாதங்களில் அளித்து அதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்கள் மக்களின் உரிமைகள், மதிப்பீடுகளை காப்பதற்காக இன்னுயிர் தியாகம் செய்ததைத் தடுக்கும் விருப்பத்துடன் ஃபேஸ்புக் செயல்பட விருப்பமுள்ளதாக இருக்கலாம்.
அதேசமயம், கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து ஃபேஸ்புக் நிர்வாகம் வெறுப்புப் பேச்சுகளை அனுமதித்து வருகிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு கடந்த 14-ம் தேதி வெளியிட்ட செய்தியில் ஒன்றும் வியப்பாக இல்லை.
ஃபேஸ்புக் நிர்வாகம் பயனாளிகளின் கருத்துக்களை ஒழுங்குபடுத்துவதில் மோசமாகச் செயல்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பின் பல்வேறு நிர்வாகிகளிடம் முறையீட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை பல்வேறு கட்சிகள் எழுப்பிஇருக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையில் ஃபேஸ்புக் தலையிடுவது மிகவும் கவலைக்குரிய விஷம் ஆதலால், இந்திய நாடாளுமன்றக் குழு மூலம் இதை தனியாக விசாரிக்க வேண்டும் என்று தனிப்பட்ட கோரிக்கையை காங்கிரஸ் வைத்தது.
இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தை திருத்தியமைப்பதில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பங்கு இருப்பது கண்டு மற்ற கட்சிகள் அஞ்சுவதைப் போல் காங்கிரஸ் கட்சியும் அஞ்சுகிறது
இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT