Published : 17 Aug 2020 05:09 PM
Last Updated : 17 Aug 2020 05:09 PM
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்ட ஷியாம் ராஜக், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் இன்று சேர்ந்தார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், மாநிலத் தலைவர் ஜெகதானந்த் சிங் ஆகியோர் முன்னிலையில் ராஜக் இணைந்தார். அதன்பின் கட்சியின் கட்சித் தலைவர் ராப்ரி தேவியைச் சந்தித்து ஷியாம் ராஜக் பேசினார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் முன்பு தீவிர விசுவாசியாகவும் அமைச்சராகவும் இருந்த ஷியாம் ராஜக், லாலுபிரசாத்துடன் ஏற்பட்ட கருத்து மோதலால், 2009-ம் ஆண்டு கட்சியிலிருந்து விலகினார். அதன்பின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ராஜக் சேர்ந்தார். அங்கு சேர்ந்த கடந்த தேர்தலில் எம்எம்ஏவாகிய ராஜக்கிற்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, ஷியாம் ராஜக்கை அமைச்சரவையில் இருந்து முதல்வர் நிதிஷ்குமார் நீக்கினார், அதுமட்டுமல்லாமல் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்குவதாக உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஷியாம் ராஜக், மீண்டும் தனது தாய்க் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு இன்று திரும்பினார். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் ஷியாம் ராஜக்கிற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், மாநிலத் தலைவர் ஜெகதானந்த் சிங் ஆகியோர் முன்னிலையில் ராஜக் இன்று இணைந்தார்.
அதன்பின் நிருபர்களுக்கு ஷியாம் ராஜக் அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ நிதிஷ் குமார் என்னை கட்சியிலிருந்து நீக்கியதாக கூறுவது பொய். நான்தான் விலகினேன். சமூகநீதி, மதச்சார்பின்மை கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன். இவை அனைத்தும் எனது தலைவர் லாலுபிரசாத்திடம் கற்றுக்கொண்டது.
கட்சியின் அனைத்து சட்டவிதிகளையும் மீறி, என்னை கட்சியிலிருந்து நீக்குவதாக நிதிஷ் அறிவித்தார். நான் 10 நிமிடங்களில் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டேன் என்ற செய்தியை கேட்கவே முட்டாள்தனமாக இல்லையா. நான் கட்சியின் தேசியக் கவுன்சில் உறுப்பினர், நிதஷ்குமார் பிரச்சாரத்துக்குச் செல்லும் போது பொறுப்பாளராக இருந்தேன். என்னை எப்படி கட்சியின் சட்ட விதிமுறைகளை மீறி நீக்க முடியும் “ எனத் தெரிவித்தார்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில் “ தாய்க்கட்சிக்கே ஷியாம் ராஜக் மீண்டும் வந்துள்ளார். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சமூகநீதி, மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவராக ராஜக் இருக்கிறார்.
மாநில அரசு இரு தலைவர்களுடன் இயங்கி வருவதால், மக்களின் பிரதிநிதிகளின் குரலைக் கேட்க யாருமில்லை. அதிகாரம்தான் ஆட்சி செய்கிறது. குற்றச்செயல்களும், வேலையின்மையும் அதிகரித்துள்ளன” எனத் தெரிவித்தார்.
ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவரும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான், ஜேடியுவிலிருந்து ஷியாம் ராஜக் விலகியதை துரதிருஷ்டமானது எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT