Published : 17 Aug 2020 09:09 AM
Last Updated : 17 Aug 2020 09:09 AM
ஜம்மு காஷ்மீரில் ஓர் ஆண்டுக்குப்பின் பரிசோதனை முயற்சியாக ஜம்மு, காஷ்மீர் இரு பகுதிகளில் தலா ஒரு மாவட்டத்தில் மட்டும் நேற்று இரவு முதல் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
இதன்படி காஷ்மீரில் உள்ள உதாம்பூர் மாவட்டம், ஜம்முவில் உள்ள காந்தர்பால் மாவட்டத்தில் மட்டும் நேற்று இரவு முதல் 4ஜி சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
இந்த 4ஜி இணைப்பு வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை பரிசோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் எந்நேரமும் உத்தரவு திரும்பப் பெறப்படும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்படுவதற்கு முதல்நாள் இரவு மாநிலம் முழுவதும் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஜனவரி 25-ம் தேதி 2ஜி இன்டர்நெட் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டது.
ஆனால் ஓர் ஆண்டுக்குப்பின் இப்போது இரு மாவட்டங்களுக்கும் மட்டும் 4ஜி அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இன்டர்நெட் சேவையை தொடங்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட இடங்களில் மீண்டும் 4ஜி இன்டர்நெட் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், எந்த நடவடிக்கையையும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் எடுக்கவில்லை என்பதால், மத்திய உள்துறை செயலாளர், ஜம்மு காஷ்மீர்தலைமைச் செயலாளர் ஆகியோர நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் கடந்த மே 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், புதிய துணைநிலை ஆளுநர் சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதால், உடனடியாக 4ஜி நெட்வொர்க் சேவையை தரமுடியாது, ஆலோசிக்க கால அவகாசம் தேவை என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றமோ சிறப்புகுழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த எந்தவிதமான தயக்கமும் தேவையில்லை ஆதலால் 4ஜி நெட்வொர்க் சேவை வழங்கலாம் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டம், ஜம்முவில் உள்ள காந்தர்பால் மாவட்டத்தில் மட்டும் நேற்று இரவு முதல் 4ஜி சேவை பரிசோதனை முறையில் மீண்டும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் உள்துறை வெளியிட்ட உத்தரவில் “ காஷ்மீரின் காந்தர்பால், ஜம்முவின் உதம்பூர் மாவட்டங்களுக்கு நள்ளிரவு முதல் 4ஜி அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் 2ஜி சேவை மட்டுமே தொடரும்.
போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையைப் பெற முடியும், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் முறையான விசாரணைக்குப்பின் சேவை கிடைக்கும். இந்த சேவை வரும செப்டம்பர் 8-ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.
தேவைப்பட்டால் இந்த சேவை மாறுதலுக்கு உட்பட்டது. 4ஜி சேவையை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT