Published : 17 Aug 2020 07:51 AM
Last Updated : 17 Aug 2020 07:51 AM
கேரளாவின் பத்திணம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், மாதப் பிறப்பையொட்டி நேற்று திறக்கப்பட்டது. 5 நாட்கள் வரை திறந்திருக்கும் நிலையில் இன்று காலை தலைமை தந்திரி சுதீர் நம்பூதரி கோயிலைத் திறந்து பூஜைகளைத் தொடங்கினார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதப்பிறப்பின் போதும் 5 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த 5 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி மலையாள மாதத்தின் சிங்கம் மாதம் இன்று பிறந்துள்ளது.
ஆனால், கேரளாவில் கரோனாவைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இந்த மாதமும் தொடர்ந்தது.
சிங்கம் மாதம் இன்று பிறந்துள்ளதையடுத்து, நேற்று மாலை 5.30 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது, ஆனால், எந்தவிதமான பூஜையும் இன்றி இரவு 7.30மணிக்கு மீண்டும் நடை சாத்தப்பட்டது.
இந்நிலையில் தலைமைத் தந்திரி ஏ.கே.சுதீர் நம்பூதரி, தந்திரி கண்டடரு ராஜீவரு ஆகியோர் சேர்ந்து ஐயப்பன் கோயில் மூலஸ்தானத்தை திறந்து திருவிளக்கு ஏற்றி, தீபாராதனை காட்டினர். தேவஸ்தான நிர்வாகிகள், கோயில் ஊழியர்கள் மட்டுமே பூஜையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நிர்மால்ய பூஜை, கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை ஐயப்பனுக்குநடைபெற உள்ளது. அதன்பின் காலை 10 மணிக்குநடை சாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும், பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆவணி மாதம் பிறப்பையொட்டி, இன்றுமுதல் 5 நாட்களுக்கு அதாவது 21-ம் தேதிவரை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால், பக்தர்கள் யாரும் வருவதற்கு தேவஸம்போர்டு தடைவிதித்துள்ளதால், படிபூஜை, நெய்அபிஷேகம், உதாயஸ்தமன பூஜை ஆகியைவை நடைபெறாது என்று தேவஸம்போர்டு அறிவித்துள்ளது.
அதன்பின் திருவோணம் பண்டிகை வருவதையடுத்து, ஓணம் பூஜைக்காக வரும் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் ேததி வரை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
நவம்பர் 16-ம் தேதி முதல் மண்டலபூஜை வழக்கம் போல் நடைபெறும் என தெரிவித்துள்ள தேவஸம்போர்டு நிர்வாகம், பக்தர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள், ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்களும் நெகட்டிவ் சான்றிதழை இணைக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT