Published : 16 Aug 2020 03:21 PM
Last Updated : 16 Aug 2020 03:21 PM
தற்சார்பு இந்தியா பற்றி இன்னும் உபதேசம் மட்டும் நாம் செய்து வருகிறோம். ஆனால், கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து, ரஷ்யா உலகிற்கு தற்சார்பு பற்றி பாடம் எடுத்துவிட்டது என்று மத்திய அரசை சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் வாரம்தோறும் கட்டுரை எழுதி வருகிறார். அவர் இந்த வாரம் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
சூப்பர் பவர் என்பதற்கு ரஷ்யா நாடுதான் உதாரணம். ஆனால் ரஷ்யாவை யாரும் நம்முடைய அரசியல் தலைவர்கள் பின்பற்றமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அமெரிக்கா மீது அன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
கரோனாவுக்கு தடுப்பு மருந்தை உள்நாட்டில் கண்டுபிடித்துள்ள ரஷ்யா அதை உற்பத்தி செய்யவும் தொடங்கி விட்டது. கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாதி மிர் உலகிலேயே முதல்கரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்ததாக அறிவித்தார். இந்த தடுப்பு மருந்து உடலில் நிலையான நோய் எதிர்ப்புச்சக்தியை தருவதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், உலகிற்கு தங்களின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என அறிவிக்கும் வகையில் தனது மகளின் உடலில் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தினார் புதின்.
தற்சார்பு பற்றி உலகிற்கே முதன்முதலாக ரஷ்யாதான் பாடம் எடுத்துள்ளது. ஆனால், நாம் தற்சார்பு பற்றி உபதேசம் மட்டுமே செய்து வருகிறோம்.
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தயா தாஸ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.
ஆனால், ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்று, நிர்த்தயா தாஸுடன் கைகளைப் பற்றி கைகுலுக்கிய பிரதமர் மோடி தன்னை தனிமைப்படுத்திக்கொள்வாரா.
குடியரசுமுன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, கரோனாவில் மோசமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாட்டில் வேலையின்மை அளவு 14 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு எந்த பணியும் இல்லை. அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் இல்லாததால், கட்சித் தொண்டர்கள் சோம்பேறியாகிவிட்டார்கள்.
எதிர்க்கட்சியினரும் அடங்கிவிட்டார்கள். டெல்லியில் எந்தவிதமான அரசியல் கூட்டமும், நிகழ்ச்சிகளும் இல்லை. சுதந்திரதின நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக இல்லை. மும்பையைப் போல் டெல்லியிலும் கரோனா அச்சம் இருக்கிறது
இவ்வாறு ராவத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT