Published : 15 Aug 2020 02:53 PM
Last Updated : 15 Aug 2020 02:53 PM
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தபின்பும், மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் சீனாவின் பெயரை குறிப்பிட ஏன் அஞ்சுகிறார்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டின் 74-வது சுதந்திரதின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் “இந்திய இறையாண்மை சவால் விடுபவர்களுக்கும், எல்லை முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடி வரை அத்திமீறியவர்கள், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் நமது ராணுவம் அவர்கள் கையாண்ட வழியில் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி எல்லையில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து பேசும் போது சீனா என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை. ஆனால், எல்லையில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்கள் என்று மறைமுகமாக மட்டுமே குறிப்பிட்டார். இதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, சீனாவின் பெயரை ஏன் மோடி குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பிரதமர் மோடியின் பேச்சுக்குப்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேசத்தில் உள்ள ஒவ்வொரு மக்களும், காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் 130 கோடி மக்களும் நம்முடைய ராணுவத்தின் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளார்கள், அவர்களை நினைத்துப் பெருமைப்படுகிறார்கள். கிழக்கு லடாக்கில் நடந்த மோதல் மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும் சீன ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்த நம்முடைய ராணுவத்துக்கு நாங்கள் சல்யூட் செய்கிறோம்.
ஆனால், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? எல்லையில் சீனா அத்துமீறியது எனத் தெரிந்தபின்பும் ஏன் சீனாவின் பெயரைக் குறிப்பிடஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்தபோது, நாட்டை சீனாவிடம் இருந்து காப்பாற்ற, பாதுகாக்க என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொரு இந்தியரும் அரசிடம் கேள்வி கேட்பதுஅவசியம். இந்த சுதந்திரத்தினத்தன்று இந்த கேள்வியைக் கேட்க வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயக உணர்வு.
மத்திய அரசிடம் நான் முக்கியமான கேள்வி கேட்கிறேன், இந்த நாட்டில் மக்கள் சுதந்திரமாக எந்த கருத்தையும் தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறதா? மக்களுக்கு அதிகாரம் இருக்கிறது எனும் விஷயத்தை நம்புகிறதா?
நம்முடைய அரசு ஜனநாயகத்தை நம்புகிறதா? பொதுமக்கள் கருத்துக்களை அறிவதில் நம்முடைய அரசுக்கு நம்பிக்கை இருக்கிறதா, சுதந்திரமாக பேசவும், சிந்திக்கவும், எங்கும் செல்லவும், எதையும் விருப்பம்போல் அணியவும், பொருளீட்டி வாழவும் சுதந்திரம் இருக்கிறதா அல்லது கட்டுப்பாடு இருக்கிறதா.
தற்சார்பு இந்தியா எனும் கருத்துக்கு அடித்தளமிட்டது தேசத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய்படேல், மற்றும் நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள்தான்.
ஆனால், பொதுத்துறைகளை விற்கும் ஓர் அரசு, ரயில்வே முதல் விமாநிலையங்கள் வரை தனியாருக்கு வழங்கும் அரசு, எல்ஐசி முதல் எப்சிஐ வரை தாக்குதல் நடத்தும் அரசு இந்த தேசத்தின் சுதந்திரத்தை காப்பாற்றி பாதுகாப்பாக வைத்திருக்குமா. நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின், அரசின் கடமையாகும்
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT