Published : 15 Aug 2020 10:48 AM
Last Updated : 15 Aug 2020 10:48 AM
நாட்டு மக்கள் ஒவ்வொவருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை 74-வது சுதந்திரதினமான இன்று பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும், 74-வதுசுதந்திரதினம் இன்று நாடுமுழுவதும் சமூக விலகலைக் கடைபிடித்து, சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் பிரதமர் மோடி, இன்று காலை ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி 74-வது சுதந்திரத்தினத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து 7-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு மக்களுக்கு சுதந்திரன உரையாற்றிய பிரதமர் மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை தனது உரையின் போது அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் நம்மை தற்சார்பை நோக்கியும், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது குறித்தும் நகர்த்தியுள்ளது. அதேபோலத்தான் சுகாதாரத்துறையிலும் தற்சார்பு அடையும் சிந்திக்க வைத்துள்ளது.
இதனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் அறிமுகம் செய்யப்படும். முழுமையாக தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுகாதாரத்துறையில் புரட்சிகொண்டுவரப்படும்.
இதன்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தனித்தனியே சுகாதார அடையாள அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையில் அந்த குறிப்பிட்ட நபர் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும்.
ஒவ்வொருமுறையும் மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் செல்லும் போது, அந்த சுகாதார அட்டையில் சிகிச்சை குறித்த விவரம் இடம் பெறும். மருத்துவர்களின் முன் அனுமதிபெறுவது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அட்டையில் இடம் பெறும்.
இந்த தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் கீழ் கொண்டுவரப்படும். இந்த திட்டத்தின் செயல்பாடு, திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவை மேலும் அதிகரிக்கப்படும்.
இந்த திட்டத்தில் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்டும் சுகாதார அடையாள அட்டையில் குறிப்பிடப்படும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்பாக வைக்கப்படும், மருந்துகள் வழங்கப்பட்டவை, நோய்சிகிச்சை குறித்த விவரங்கள், டிஸ்சார்ஜ் விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.
நோயாளிகள் ஒருமுறை மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களிடம் தங்களின் விவரங்களை சிகிச்சையின்போது கொடுத்தால் போதுமானது. அந்தவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். அனைத்து விவரங்களும் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு முறை மருத்துவரைச் சந்திக்கும் போது நோயாளியின் சம்மதத்துடன் அந்த விவரத்தை பார்க்கும் வகையில் இருக்கும்.
மேலும், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லாமல், தொலைவில் இருந்தவாறே டெலிமெடிசின் மூலமும், இ-பார்மஸி மூலமும் தங்கள் சிகிச்சைக்கான ஆலோனைகளைப் பெறலாம்.
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் சுகாதாரப்பணியாளர்கள் போன்ற கரோனா போர்வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். ஒட்டுமொத்த தேசத்தின் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அனைத்து மருத்துவ, சுகாதாரப்பணியாளர்களும் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர்.
எல்லோருடைய மனதிலும் இப்போது இருக்கும் சந்தேகம் கரோனா தடுப்பு மருந்து குறித்ததுதான். நம்முடைய விஞ்ஞானிகள் 3 தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து அது பல்வேறு கட்டப் பரிசோதனையில் இருக்கின்றன. கரோனா தடுப்பு மருந்து தயாராகிவிட்டால் விரைவாக பெரிய அளவு உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து இந்தியர்களுக்கும் குறைந்த நாட்களி்ல் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT