Published : 15 Aug 2020 08:06 AM
Last Updated : 15 Aug 2020 08:06 AM
நாட்டில் 74-வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை தொடர்ந்து 7-வது முறையாக ஏற்றிவைத்தார்.
பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள ராஜ் காட் மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பி்ன் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் டெல்லி செங்கோட்டைக்கு வந்தார். செங்கோட்டை லகோரி நுழைவாயில் பகுதியில் பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
அதன்பின் லெப்டினெல் கர்னல் கவுரவ் எஸ் யேல்வால்கர் தலைமையிலான அணி வகுப்பு மரியாதை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதன்பின் மேஜர் ஸ்வேதா பாண்டே உதவியுடன், பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி டெல்லி செங்கோட்டையைச் சுற்றி பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
என்எஸ்ஜி படை, ஸ்வாட் கமாண்டோஸ், கைட் கேட்சர்ஸ் ஆகியோர் கொண்ட படை பிரதமர் மோடி உரையாற்றும்போது செங்கோட்டையைச் சுற்றி தீவிர பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
செங்கோட்டையில் பாதுகாப்புப் பணிகளைக் கண்காணிக்கும் வகையில் 300 கேமிராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் மட்டும் 4 ஆயிரம் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப் பணியில் சமூக விலகலைக் கடைபிடித்து ஈடுபட்டுள்ளனர்.
என்எஸ்ஜி, எஸ்பிஜி, ஐடிபிபி, ஸ்வாட் படைகள், ஆகியோருடன் சேர்ந்து டெல்லி போலீஸாரும் பன் அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்லி செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வரும் பாதையில் அதிதீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டையின் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் முன்னெச்சரிக்கையாக அமைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக மாதவ் பார்க், ஆகஸ்ட் பார்க் ஆகிய இடங்களில் சிறிய மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்களுக்கு கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக இந்த முகாம்களில் சேர்க்கப்படுவார்கள். மேலும், முக்கிய இடங்களில் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
செங்கோட்டையின் அனைத்து நுழைவாயில்களிலும் பாதுகாப்புப்படையினர் தெர்மல் ஸ்கேனர் கொண்டு வருவோர் அனைவரையும் பரிசோதித்த பின்பே அனுமதிக்கின்றனர்.
நிகழ்ச்சிக்குவரும் முக்கிய விஐபிக்கள், விருந்தினர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முக்ககவசம் அணிந்து வர பாதுகாப்புப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், கையிருப்பாக ஏராளமான முகக்கவசங்களையும் வைத்துள்ளனர். முகக்கவசம் இல்லாமல் வருவோருக்கு முகக்கவசம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டைக்கு வந்து பேசி முடித்து செல்லும் வரை அந்த வழித்தடத்தில் எந்தவிதமான ரயில்போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
74-வது சுதந்திரதினத்தையொட்டி டெல்லியில் உள்ள ஹோட்டல்கள் அனைத்திலும் டெல்லி போலீஸார் கடந்த சில நாட்களாக தீவிரமாகச் சோதனை நடத்தினர். சந்தேகத்துக்கிடமாக யாரேனும் தங்கி இருக்கிறார்களா எனவும்விசாரணை நடத்தியுள்ளனர்.
பிரதமர் மோடி செங்கோட்டையில் பேசி முடித்து செல்லும் வரை செங்கோட்டையைச் சுற்றி பட்டம் பறக்கவிட தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாரா கிளைடர்ஸ்,பாராமோட்டார்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ட்ரோன்கள், ஹாட்பலூன்கள், உள்ளிட்டவை அனைத்தும் சுதந்திரதினம் முடியும்வரை பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT