Last Updated : 13 Jan, 2014 12:00 AM

 

Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM

குடும்ப அரசியலுக்கு எதிரானது ஆம் ஆத்மி: குமார் பிஸ்வாஸ்- அமேதி பிரச்சாரத்தில் கறுப்புக் கொடி, அமளி

ஆம் ஆத்மி கட்சி குடும்ப அரசியலுக்கு எதிரானது என அக்கட்சியின் முக்கிய தலைவரும், அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளவருமான குமார் பிஸ்வாஸ் தெரிவித்தார்.

கறுப்புக் கொடி, அமளிக்கிடையே, மக்களவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் பிரச்சாரக் கூட்டம் அமேதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் பிஸ்வாஸ் பேசியதாவது:

கடந்த பத்து வருடங்களாக அமேதி மக்களவை உறுப்பினராக உள்ள ராகுல், தொகுதி மக்களின் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்ததில் எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. நேரு காலத்தில் சாலைகள் போடுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

எனக்கு எதிராக சிலர் கறுப்புக் கொடிகளைக் காட்டினர். இதைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். ராணியின் (சோனியா) மருமகன் (ராபர்ட் வதேரா) செய்த நில ஒதுக்கீடு ஊழலையே நாங்கள்தான் தைரியமாக வெளியில் கொண்டு வந்தோம்.

நான் இங்கு போட்டியிடப் போவதாக அறிவித்தவுடன் மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா, என்னை ஒரு கோமாளி என்றார். இந்தக் கோமாளியின் பணி மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைப்பதுதான். அதற்காக அவன் கடுமையாக உழைக்கிறான். ஆனால், மற்றவர்களைப்போல் மக்களை ஏமாற்றவில்லை, மோசடி செய்யவில்லை.

உங்களுக்கு வேலை செய்வதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்னைப்போல் ஒரு வேலைக்காரனைத் தேர்ந்தெடுங்கள். தேர்தலில் வெற்றி பெறுவோருக்கு நீங்கள் வேலைக்காரர்கள் ஆகாதீர்கள். ஆம் ஆத்மி கட்சியை குறைவாக மதிப்பிட வேண்டாம். என்னை அடித்தாலும், உதைத்தாலும் நான் அமேதியை விட்டு வெளியேற மாட்டேன். இங்கும் பிரியங் காவைப் போன்ற சகோதரிகள் அதிகம். அவர்கள் பெயரில் காந்தி இல்லையே தவிர, அந்த பிரியங்காவை விட அதிக திறமை கொண்டவர்கள். அந்த திறமையை வெளிக் கொண்டு வர அமேதியில் நல்ல பள்ளிக்கூடங்கள் இல்லை.

குடும்ப அரசியலுக்கு எதிரி

நான் ராகுலுக்கு எதிரானவன் அல்ல. அவருடைய குடும்ப அரசியலுக்குதான் எதிரி. அவருக்காக பிரதமரே தன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறுவது நம் நாட்டிற்கே அவமானம்.

குடும்ப அரசியல் பரூக் அப்துல்லா முதல் கருணாநிதி வரை நீள்கிறது. இதை ஆம் ஆத்மி கடுமையாக எதிர்க் கிறது. இனி இந்த நாட்டில் குடும்ப அரசியல் தொடர வேண்டுமா அல்லது பதவிகளுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா என்பதை மக்கள்முடிவு செய்ய வேண்டும் என பிஸ்வாஸ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஆம் ஆத்மியின் சார்பில் உபியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தபட்டு வரும் சஞ்சய்சிங் மற்றும் இருதினங்களுக்கு முன் கட்சியில் இணைந்த பிரபல இந்தி பத்திரிகையாளர் அசுதோஷ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

பிஸ்வாசுக்கு எதிராக கறுப்புக் கொடி

முன்னதாக இக்கூட்டத்திற்காக பிஸ்வாஸ் வந்தபோது, அமேதியின் முக்கிய இடங்களில் கூடி நின்ற சிலர் கறுப்புக் கொடி காட்டியதுடன், ‘திரும்பி போ’ என எதிர்ப்பு கோஷங்களும் எழுப்பினர். இன்னும் சில இடங்களில் அவரது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பல இடங்களில் அமளி நிலவியது.

பொதுக்கூட்டத்திற்குள்ளும் புகுந்து கொண்ட எதிர்ப்பாளர்கள், பிஸ்வாஸ் பேசியபோது கறுப்புக் கொடிகளை காட்டியதுன் கோஷம் எழுப்பினர். இவர்களிடமிருந்த கறுப்புக் கொடிகளைப் பறித்த ஆம் ஆத்மி கட்சியினர், அவைகளுக்கு தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த கூட்டத்திற்காக சனிக்கிழமை லக்னோ வந்து சேர்ந்த குமார் பிஸ்வாஸ் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் மீது முட்டைகளும் வீசப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x