Published : 14 Aug 2020 05:18 PM
Last Updated : 14 Aug 2020 05:18 PM
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அசோக் கெலாட் அரசு இன்று கொண்டு வந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. குரல் வாக்கெடுப்பின் மூலம் 107 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி சபாநாயகர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய சச்சின் பைலட் “ காங்கிரஸ் கட்சியின் வலிமையான போர் வீரன், எந்தவிலை கொடுத்தேனும் கட்சியை காப்பேன்” எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.
காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடியது.
முன்னதாக பாஜக சார்பில் நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பி்க்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தீர்மானமிக்கப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவும் முடிவு செய்யப்பட்டது.
அசோக் கெலாட்டுடன் அதிருப்தி ஏற்பட்டு தனியாகச் செயல்பட்ட சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் அரசில் ஒற்றுமையாக இணைந்திருப்பதால், காங்கிரஸ் கட்சியின் பலம் பேரவையில் 107 ஆக அதிகரித்தது.
இந்த சூழலில் இன்று சட்டப்பேரவை காலை கூடியது. அப்போது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் அசோக் கெலாட் கோரினார். அப்போது தனது ஆட்சியை கவிழ்க்க பாஜக பல்வேறு சதிச்செயல்கள் தீட்டியதை சுட்டிக்காட்டியும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அசோக் கெலாட் பேசுகையில் “ எத்தனை முயற்சிகள் செய்து எனது ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும், எந்த விலை கொடுத்தேனும் ஆட்சியை கவிழ விடமாட்டேன்” எனத் தெரிவித்தார்.
அதன்பின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோர் பேசுகையில் “ காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிட்டுப் பேசும் போது சச்சி்ன் பைலட் பெயரை குறிப்பிட்டும், சமீபத்தில் அவருக்கு எதிராக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், போலீஸார் அளித்த விசாரணை நோட்டீஸ் ஆகியவற்றை குறிப்பிட்டுப் பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த சச்சின் பைலட் , ராஜேந்திர ரத்தோர் பேச்சில் குறுக்கிட்டுப் பேசினார். சச்சின் பைலட் பேசுகையில் “ என்னுடைய பெயரை எதற்காக அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள். நான் முன்பு அமர்ந்திருந்த இடம் கூட மாற்றப்பட்டுள்ளது.
நானும் பாதுகாப்பாக இருக்கிறேன், அரசும் பாதுகாப்பாக இருக்கிறது. எதற்காக சபாநாயகரும், கொறாடாவும் எனக்கு இந்த இருக்கையை ஒதுக்கி இருக்கிறீர்கள் என நினைத்தேன். இரு நிமிடங்களில் அடுத்த எல்லை வந்துவிடும் என நினைத்தேன்.
ஒருபுறம் எதிர்க்கட்சி, மறுபுறம் ஆளும் கட்சி. யார் எல்லை தாண்டிச் சென்றது. காங்கிரஸ் கட்சியின் இந்த வலிமையான போர் வீரராக எல்லைத் தாண்டிச் சென்றேன். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டன, இனிமேல் பல்வேறு விஷயங்களும் வெளியாகும்.
நானும் எனது ஆதரவாளர்களும் சொல்வது என்னவென்றால், எங்களின் குறைகளை மருத்துவரிடம்(கட்சித் தலைமையிடம்) சொல்விட்டோம். சிகிச்சைக்குப்பின் இப்போது நலமுடன் வந்துள்ளோம். 125 பேர் அவையில் நிற்கிறோம்.
கட்சியும் ஆட்சியும் பாதுகாப்பாக இருக்கிறது. எந்த விலை கொடுத்தேனும் அரசையும், கட்சியையும் காப்பேன்” எனத் தெரிவி்த்தார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவாக 107 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வென்றதாக, சபாநாயகர் சி.பி. ஜோஷி அறிவித்து பேரவையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT