Published : 05 Sep 2015 09:06 AM
Last Updated : 05 Sep 2015 09:06 AM
டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமை யிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அரசுப் பேருந்துகளை இயற்கை எரிவாயுவால் (சிஎன்ஜி) இயங்கும்படி மாற்றுவதற்கான தகுதி சோதனையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக நேற்று முன்தினம் 9 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.
டெல்லியின் ஊழல் தடுப்பு பிரிவின் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், டெல்லியின் முன் னாள் போக்குவரத்து ஆணையர் கள் ஆர்.கே.வர்மா, ஆர்.சந்திர மோகன் எனும் இரு ஐஏஎஸ் அதிகாரிகள், 4 இளநிலை அதிகாரி கள் உட்பட 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 25 பேர் சாட்சிகளாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
கடந்த 2002-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, டெல்லியில் டீசலில் இயங்கி வந்த அரசுப் பேருந்துகளை இயற்கை எரிவாயுவினால் இயங்கும் வகை யில் டெல்லி அரசு மாற்றி அமைக்கத் தொடங்கியது. இதற்கான சாதனங்களை தனியாரிடம் பல கோடி ரூபாய் மதிப்பில் விலைக்கு வாங்கி நடத்திய தகுதித் தேர்வு சோதனைகளின் மீது ஊழல் புகார் கிளம்பியது. இதில் கடந்த 2012-ல் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2013 பிப்ரவரியில் டெல்லி முதல்வராக பதவி ஏற்ற அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியில், இந்த ஊழல் வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டது. இதன் மீதான விசாரணையில் எரிவாயு சோதனையை நடத்திய ஈஎஸ்பி இந்தியா போலி நிறுவனம் எனத் தெரியவந்தது. அமெரிக்க நிறுவனமான ‘ஈஎஸ்பி யுஎஸ்ஏ’வின் இந்தியக் கிளை எனக் கூறி அரசு அதிகாரிகளின் துணையுடன் சிலர் இந்த நிறுவனத்தை நடத்தியது தெரியவந்தது.
இதற்காக, அந்நிறுவன உயர் அதிகாரிகள் இருவர், டெல்லி அரசின் 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டெல்லி வழக்கறிஞரான சுபோத் ஜெயின் என்பவர் சிபிஐயிடம் ஒரு புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சக அனுமதியுடன் சிபிஐ அதன் மீது தொடக்ககட்ட விசாரணை நடத்தி வந்தது.
பிறகு 2015 பிப்ரவரியில் மீண்டும் முதல்வரான கேஜ்ரிவால், இந்த ஊழல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைத்தார். உடனே துணைநிலை ஆளுநரின் அனுமதி இன்றி விசாரணைக்குழு அமைக்க கேஜ்ரிவால் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் களில் ஒருவரும் டெல்லி அரசின் முன்னாள் அதிகாரியுமான எம்.ஏ.உஸ்மானியும், டெல்லி அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் நஜீப் ஜங் மறுத்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் குடியரசுத் தலைவரிடம் ஆம் ஆத்மி அரசு புகார் அளிக்க இருக்கிறது. டெண்டர் விடாமல் நேரடியாக ‘ஈஎஸ்பி இந்தியா’ நிறுவனத்துக்கு பணி ஒதுக்கிய ஊழலை தகவல் அறியும் உரிமை சட்ட உதவியால் டெல்லி பாஜக தலைவர்களில் ஒருவரான விவேக் கர்க் என்பவர் கண்டுபிடித்தார்.
குற்றவாளிகளை காப் பாற்ற முயல்வது யார் என்ற குழப்பம் விலக அவகாசம் பிடிக்கும் என எண்ணுகிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT