Published : 14 Aug 2020 07:09 AM
Last Updated : 14 Aug 2020 07:09 AM
பெங்களூருவில் கலவரத்தை தூண்டியதாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 16 பேர் உட்பட 22 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன் (25). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முகநூலில் மதம் தொடர்பாக கருத்து மோதல் நடந்துள்ளது. நவீன் முஸ்லிம் மதத்தையும், முஸ்லிம்கள் இந்து மதத்தையும் மாறி மாறி விமர்சித்ததால் பகை இருந்துள்ளது. அயோத்தியில் ராமஜென்ம பூமி பூஜை நடந்த போது முஸ்லிம்கள் ராமரை விமர்சித்ததால், நவீன் முகநூலில் கண்டித்துள்ளார். இந்த மோதலின் தொடர்ச்சியாக நவீன் முஸ்லிம் மத வெறுப்பை தூண்டும் வகையில்பதிவிட்டதால் மோதல் முற்றியது.
இதுதொடர்பான புகாரை ஏற்க மறுத்த காடு கொண்டனஹள்ளி, தேவர் ஜீவனஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய 3 காவல் நிலையங்களுக்கும், அகண்ட சீனிவாச மூர்த்தி மற்றும் நவீனின்வீட்டுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தீ வைத்தனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் வீடுகள், வாகனங்கள், ஏடிஎம் இயந்திரங்கள் ஆகியவற்றையும் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாஜித் கான் (20), யாஷீன் பாட்ஷா (20) , ஷேய்க் சாதிக் (26) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். குண்டடிப்பட்ட 3 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் காயமடைந்த 60 போலீஸார் உட்பட 140 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேதப்படுத்தப்பட்ட வீடுகள், வாகனங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணியில் போலீஸார் நேற்று ஈடுபட்டனர்.
144 தடை உத்தரவு
பெங்களூரு காவல் ஆணையர் கமல் பந்த் கூறுகையில், ‘‘இந்த சம்பவத்துக்கு காரணமான முகநூல் பதிவை எழுதிய நவீன் மீது3 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டி, கும்பலுடன் வன்முறையில் ஈடுபட்டதாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த அப்பாஸ், ஃபெரோஸ், முஷாமில் பாஷா, ஹபீப், கலீம், ஜாவீத் உள்ளிட்ட 16 பேர் மீதும், மேலும் 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது கலவரத்தை தூண்டியது, வன்முறையில் ஈடுபட்டது, பொதுசொத்தை சேதப்படுத்தியது, போலீஸாரின் ஆயுதங்களை பறித்தது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 165 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். பதற்றமான காடுகொண்டனஹள்ளி, தேவர் ஜீவனஹள்ளி, காவல் பைரசந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் 15-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு முழுவதும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’’ என்றார்.
உள்துறை அமைச்சர் பசவ ராஜ் பொம்மை கூறும்போது, ‘‘இந்தகலவரம் நன்கு திட்டமிட்டு, 4,000 பேரை திரட்டி நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் எஸ்டிபிஐ, பிடிஎஃப், கேடிஎஃப் ஆகிய அரசியல் கட்சியினர் இருக்கின்றனர். இந்த கட்சியினர் இருக்கும் வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அதை வைத்து இந்த கட்சியினருக்கும், கலவரத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்படும்’’ என்றார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘மதவெறுப்பை தூண்டும் வகையில்பதிவிட்ட நவீனுக்கும் காங்கிரஸுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.அவர் பாஜகவை சேர்ந்தவர். காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியும், நவீனும் கடந்த 10 ஆண்டுகளாக பேசிக் கொள்வதில்லை. நவீன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதி வந்திருக்கிறார். இதில் போலீஸார் தொடக்கத்திலே நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய வன்முறை நடந்திருக்காது. இந்த வன்முறையில் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT