Published : 13 Aug 2020 05:04 PM
Last Updated : 13 Aug 2020 05:04 PM
கரோனா நோயாளிகள் உயிர்காக்க வழங்கப்படும் ஜெனரிக் மருந்தான ரெம்டெசிவிரை ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
‘ரெம்டெக்’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், 100 எம்.ஜி. அளவு கொண்ட மருந்துக்கு ரூ.2,800 விலை நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகளில் மிகக் குறைந்த விலை கெடிலா நிறுவனத்தின் ரெம்டெக் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கெடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஷார்வில் படேல் நிருபர்களிடம் இன்று கூறுகையில், “இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில், தீவிரமான கரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் ஜெனரிக் வகையை ரெம்டாக் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளோம்.
100 எம்.ஜி. அளவு கொண்ட ஒரு மருந்தின் விலை ரூ.2,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த மருந்தை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க வழி செய்துள்ளோம்.
கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
கரோனா தடுப்பு மருந்தை ஜைகோவி-டி என்ற பெயரில் கண்டுபிடித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம் தற்போது மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையின் 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்தை அறிமுகம் செய்த 5-வது நிறுவனம் கெடிலாவாகும். இதற்குமுன், ஹெட்ரோ லேப்ஸ், சிப்லா, மைலான், ஜூப்ளியன்ட் லைப் சயின்ஸ் ஆகிய நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்தை அறிமுகம் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT