Published : 13 Aug 2020 10:37 AM
Last Updated : 13 Aug 2020 10:37 AM
சுதேசி என்றால் ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. நம்நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில்நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்யலாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் ஒரு நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் காணொலி மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த உலகில் சிறந்ததாக இருக்கும் அனைத்தையும் இந்தியா எடுத்துக்கொள்ளலாம், நம்முடைய தேவைக்கு ஏற்ப வெளிநாடுகளிலும் இருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும். சுதேசி என்பது உள்நாட்டு பொருட்களுக்கும், தொழில்நுட்பத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகும்.
ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. நம்நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில்நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்து நம்நாட்டுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ளலாம்.
கரோனா வைரஸ் தொற்று வந்தபின் உலகமயமாக்கல் என்பது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகளைத் தராது என்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. ஒரே பொருளாதார மாதிரித் திட்டம் என்பது அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது.
சுயச்சார்பு அடைந்த நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, கூட்டுறவு தேவை. உலகம் என்பது ஒரு குடும்பம், ஒரு சந்தை அல்ல என்பதை அனைவரும் கருத வேண்டும்.
சுதந்திரத்துக்குப்பின், மேற்கத்திய மற்றும் வெளிநாடுகளின் தாக்கத்தால் ஏற்படும் இழப்பிலிருந்து நம்மை காக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நாம் நடைமுறைப்படுத்தவில்லை.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைவிட உள்நாட்டில் தயாரிக்கப்பட்டபொருட்கள், தொழில்நுட்பங்கள் சிறப்பாக இருக்கின்றன. இது மிகவும் நல்ல அறிகுறி, நாம் சரியான திசையில் வளர்ந்துவருகிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.
இந்தியாவின் பொருளாதார இலக்குகளை நனவாக்குவதற்கு மக்களும், அரசும் விரிவான ஒருங்கிணைந்த பார்வையுடன், தொடர்புடைய கொள்கைகளை முறையாகச் செயல்படுத்துவது குறித்து நம்பிக்கையுடன் சிந்திக்க வேண்டும்.
உலகம் முழுவதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை உள்ளூர்மயமாக்குவது சமூகத்துக்கு அவசியமானது. நம்முடைய நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தரக்குறைவானது என்ற மனநிலை மக்கள் மனதிலிருந்து மாற வேண்டும்.
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக்கொள்கை இந்தியா தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல சரியான அடியை எடுத்து வைத்துள்ளது. இதுபோன்ற கொள்கைகள் இந்திய மக்களின் திறன், திறமையையும், பாரம்பரிய அறிவையும் உணரவைக்கும்.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...