Published : 13 Aug 2020 08:51 AM
Last Updated : 13 Aug 2020 08:51 AM
புதிய கல்விக்கொள்கையின்படி, ஒரு பல்கலைக்கழகம் 300 கல்லூரிகளுக்கும் அதிகமாக இணைக்க முடியாது. மாறாக கல்லூரிகளுக்கு அதிகமாக சுயாட்சி அந்தஸ்துகளை வழங்கலாம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இந்த கல்விக்கொள்கையில் உயர் கல்வியில் முக்கிய அம்சங்களாக, அடுத்த 15 ஆண்டுகளில் கல்லூரிகளை பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முறை படிப்படியாக நீக்கப்பட வேண்டும் என்றும் படிப்படியாக கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் கல்லூரிகள் செயல்பட முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சூழலில் கரோனா வைரஸுக்குப்பின் கல்வி என்ற தலைப்பில் நேற்று காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நான் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அப்போது அந்த பல்கலைக்கழக துணை வேந்திரிடம் எத்தனை கல்லூரிகளை, பல்கலைக்கழகத்துடன் இணைத்துள்ளீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர், ஏறக்குறைய 800 கல்லூரிகளுக்கு மேல் இணைத்துள்ளோம். அந்த கல்லூரிகளுக்கு பட்டம் வழங்குகிறோம் என்றார். எனக்கு தவறாகப் பட்டது. உடனே மறுபடியும் அவரிடம், எத்தனை கல்லூரிகளை பல்கலைக்கழகத்துடன் இணைத்துள்ளீர்கள் என்றேன். அதற்கு அவர் மீண்டும் 800 கல்லூரிகள் என்று பதில் அளித்தார்.
நான் பங்கேற்றது பட்டமளிப்பு விழா, இந்த செய்தி கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த துணை வேந்தராவது 800 கல்லூரிகளின் முதல்வர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வதும், கல்லூரியின் பெயரை நினைவில் வைப்பதும் சாத்தியமா?
இதுபோன்ற அதிகஅளவிலான கல்லூரிகள் ஒரு பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படும்போது அந்த கல்லூரிகளின் கல்வித் தரம், செயல்பாடு ஆகியவற்றை தக்கவைக்க துணை வேந்தரால் முடியுமா?
அதனால்தான், புதியக் கல்வியில் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு மாற்றுத்திட்டம் கொண்டுவந்துள்ளோம். பல்கலைக்கழக்கங்களில் கல்லூரிகளை இணைக்கும் முறை படிப்படியாக அடுத்த 15 ஆண்டுகளில் நீக்கப்படும்.
ஒரு பல்கலைக்கழகம் 300 கல்லூரிகளுக்கு மேல் இணைக்க முடியாது. தேவைப்பட்டால் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். காலத்துக்கு ஏற்ப அதைச் செய்யலாம்.
தற்போது 45 ஆயிரம் கல்லூரிகள் இருக்கின்றன, இதில் 8ஆயிரம் கல்லூரிகள் மட்டுமே தன்னாட்சி பெற்றவை. இனிவரும் காலங்களில் கல்லூரிகளின் கல்வித் தரத்துக்கு ஏற்ப படிப்படியாக கல்லூரிகளின் தரமதிப்பீட்டை உயர்த்தி, கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்
இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT