Published : 13 Aug 2020 08:05 AM
Last Updated : 13 Aug 2020 08:05 AM
காங்கிரஸ் தலைவரும், செய்தித்தொடர்பாளருமான ராஜீவ் தியாகி நேற்று தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 52.
உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள வசுந்தரா பகுதியில் உள்ள செக்டர் 16 பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தவாரே தியாகி நேற்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.
விவாத நிகழ்ச்சி முடிந்தபின், சிறிது நிமிடங்களில் தனது படுக்கைக்குச் சென்று தியாகி சற்று ஓய்வு எடுத்தார். அப்போது வேலைக்காரப் பெண்ணிடம் தியாகி தேநீர் கேட்டுள்ளார். அவர் தேநீர் எடுத்துக்கொண்டுவந்து கொடுக்கும் போது, தியாகி அசைவற்று படுக்கையில் இருந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற தியாகியின் குடும்பத்தினர், கவுசாம்பியில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடனடியாக தியாகியை கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் கடுமையாக முயற்சித்தும் அவரின் உயிரை மீட்கமுடியவில்லை. வரும் வழியிலேயே அவர் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜீவ் தியாகிக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.
இதுகுறித்து தியாகியின் உறவினர் தீபக் தியாகி கூறுகையில் “ தியாகி அசைவற்று இருக்கிறார் என்றவுடன் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், அவரின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உயிர் வழியிலேயே பிரிந்துவிட்டது என்று அறிவித்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
ராஜீவ் தியாகி மறைவுக்கு கட்சி பாகுபாடின்றி காங்கிரஸ், பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் நேற்று இரங்கல் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜீவ் தியாகி குடும்பத்தினரை தொலைப்பேசியில் அழைத்துப் பேசி ஆறுதல் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி,பிரியங்கா காந்தியும் தொலைப்பேசியில் பேசி குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ராஜீவ் தியாகி மறைவு குறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “ ராஜீவ் தியாகி மறைவால் காங்கிரஸ் கட்சி மிகுந்த வருத்தமடைகிறது. காங்கிரஸின் தீவிரமான தொண்டர், விசுவாசி. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல்களையும், பிரார்த்தனைகளையும் செய்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவில் “ காங்கிரஸ் கட்சி ஒரு சிங்கத்தை இழந்துவிட்டது. ராஜீவ் தியாகியின் அன்பும், போராட்டத்தையும் கட்சி எப்போதும் நினைவில் கொள்ளும். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி ட்விட்டரில்பதிவிட்ட கருத்தில் “ தியாகியின் மறைவு அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு. தியாகியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சித்தாந்த ரீதியாக கருத்துக்களை வைத்து போராடுவதில் ராஜீவ் தியாகி வல்லவர். அவரின் மறைவு அனைவருக்கும் இழப்பு. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு உ.பி. மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அவரின் குடும்பத்தாருக்கு மனவலிமையை இறைவன் வழங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக எம்.பி. அனில் பலூனியுடன் பங்கேற்று சில நிமிடங்களில் ராஜீவ் தியாகி உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு அனில் பலூனி அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் தெரிவி்த்துள்ளார். பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ராவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT