Published : 11 Aug 2020 04:41 PM
Last Updated : 11 Aug 2020 04:41 PM
கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்துவருகிறது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் கனமழை விடாது பெய்து வருகிறது.
மூணாறு கிராமப் பஞ்சாயத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் ராஜமலை செல்லும் பகுதியில் பெட்டிமடா பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
நேமக்கடா பகுதியில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர், போலீஸார், பேரிடர் மீட்புப்படையினர் வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நிலச்சரிவு நடந்த பகுதியில் கனமழை பெய்ததாலும், மீட்பு வாகனங்கள் செல்லமுடியாததாலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
பாறைகளும், மண்ணும் சேர்ந்து 20 வீடுகளையும் மூடின. இதனால் மண் அள்ளும் எந்திரமும் மீட்புப்பணியில் ஈடுபடுவதில் சி்க்கல் நீடித்தது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நேற்றுவரை 48 உடல்களை பேரிடர் மீட்புப்படையினர் மீட்ட நிலையில் புதையுண்ட பகுதியில் இருந்து அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அங்கு இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. புதையுண்ட பகுதியில் இருந்து இன்று இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. கடுமையான மழை பெய்து வரும் சூழலிலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT