Published : 11 Aug 2020 12:39 PM
Last Updated : 11 Aug 2020 12:39 PM
ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு, அதாவது சுதந்திர தினம் முடிந்த பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் தலா ஒரு மாவட்டத்திற்கு சோதனை அடிப்படையில் 4ஜி இணையச் சேவை அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வின் முன் செவ்வாயன்று வந்த விசாரணையின் போது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “சூழ்நிலைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு அங்கு ஆகஸ்ட் 16ம் தேதி மதல் அதிவேக இணையச் சேவையை குறிப்பிட்ட பகுதிகளுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது. அரசு 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சூழ்நிலையை ஆய்வு செய்யும்.
ஆனால் எல்லைப்பகுதிகளுக்கு அதிவேக இண்டெர்நெட் சேவை தரமுடியாது, இப்போது தர முடிவெடுத்துள்ள பகுதியிலேயே சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்துதான் தர முடியும்” என்று தெரிவித்தார்.
மீடியா புரொபஷனல்ஸ் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு ஜம்மு காஷ்மீருக்கு 4ஜி சேவை அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக நீதிமன்றம் இட்ட உத்தரவை அரசு பின்பற்றவில்லை என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில்தான் மத்திய அரசு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தலா ஒரு மாவட்டத்துக்கு முதலில் சோதனை அடிப்படையில் 4ஜி இணையச்சேவையை வழங்க அனுமதியளிப்போம் என்று தெரிவித்துள்ளது.
இதன் விளைவுகள் என்னவென்பது பற்றி ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்யப்படும், ஒட்டுமொத்தமாக 2 மாதங்களுக்குப் பிறகு சூழ்நிலை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேலும் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதிவேக இணையதள சேவையை அனுமதித்தால் ஜம்மு காஷ்மீரில் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகளுக்கு தூண்டுகோலாக அமைந்து விடும், இதனால் தேவையற்ற வதந்திகள் பரப்பப்பட்டு பொது அமைதி குலையும் என்று மத்திய அரசு கருதி நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் உச்ச நீதிமன்ற அமர்வு இதன் மீதான விசாரணையை 2 வாரங்கள் கழித்து மீண்டும் நடத்துவதாக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT