Published : 10 Aug 2020 06:05 PM
Last Updated : 10 Aug 2020 06:05 PM
கரோனா வைரஸ் பாதிப்பினாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவினாலும் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்ய பிரதமர் மோடி அரசு 3 வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிபிசியுடனான மின்னஞ்சல் பரிவர்த்தனையில் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற நேரடியாக பண உதவி, செலவு செய்யும் திறனை தக்கவைத்தல், வர்த்தகங்களுக்கு தொழில்களுக்கு அரசு ஆதரவுடன் கூடிய கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் நிறுவன தன்னாட்சி மற்றும் நடைமுறைகள் மூலம் நிதி கிடைக்கச் செய்தல் ஆகிய வழிமுறைகளை கையாள வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
“இந்தப் பொருளாதார நெருக்கடி கரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட மனிதார்த்த நெருக்கடியாகும். இதற்குத் தீர்வு காணும்போது நம் சமூகத்துக்கேயுரிய உணர்வுகளுடன் அணுக வேண்டுமே தவிர எண்களாலும் பொருளாதார முறைமைகளாலும் அளக்கக் கூடாது.
வர்த்தகங்களுக்கு உதவ நேரடி பணம் அளித்தல் என்பதற்கு பெரிய அளவில் கடன் வாங்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது. இதற்காக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் ராணுவ, சுகாதார, பொருளாதார சவால்களைச் சமாளிக்க கூடுதலாக 10% செலவானாலும் செய்துதான் தீர வேண்டும்.
மார்ச் மாத காலாண்டின் முடிவில் பொருளாதாரம் 3.1% ஆக சரிவடைந்தது. 11 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலை. கடன் வாங்குவதன் முலம் இதனை சரி செய்ய முடிந்தால், இதன் மூலம் எல்லைகளைக் காக்க முடியும், வாழ்வாதாரங்களை தற்காக்க முடியும் என்றால், பொருளாதார மேம்பாடு அடைய முடியும் என்றால் கடன் வாங்குவதில் தவறில்லை” இவ்வாறு கூறியுள்ளார் மன்மோகன் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT