Last Updated : 28 May, 2014 08:42 AM

 

Published : 28 May 2014 08:42 AM
Last Updated : 28 May 2014 08:42 AM

நரேந்திர மோடியின் முதல் நாள்: காலை 8.30 மணிக்கே பணியைத்தொடங்கினார்

பிரதமராகப் பதவியேற்று முதல் நாள் பணியை காலை 8.30 மணிக்கே நரேந்திர மோடி தொடங்கினார். ஒரே நாளில் ஐந்து நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளார்.

நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு அவர் தன் பணியைத் தொடங்கினார். அமைச்சர்களின் இலாகாக்கள் விவரங்களை முடிவு செய்து அறிவித்தார். குஜராத் பவனில் இருந்து பிரதமர் அலுவலகம் சென்றார். அங்கு மகாத்மா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார்.

ஹைதராபாத் இல்லத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து, சந்திக்கவுள்ள வெளிநாட்டு தலைவர்களின் நிகழ்ச்சி விவரங்களை முடிவு செய்தார். கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார். காலை 11 மணியளவில் பிரதமராக பொறுப்பேற்றதற்கான கோப்பில் முறைப்படி கையெழுத்திட்டார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் சர்மின் சவுத்ரி ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து அந்த நாடுகளுடன் இந்தியாவின் உறவு, வெளியுறவு விவகாரங்கள், முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாலை 5.30 மணியளவில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோரை தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான கோப்பு உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இக்குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தர விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி தற்போது குஜராத் இல்லத்தில் தங்கி உள்ளார். பிரதமர் இல்லத்துக்கு குடிபெயர இன்னும் சில தினங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. பதவியேற்ற முதல் நாளான நேற்று பரபரப்பாக நரேந்திர மோடி செயல்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x