Last Updated : 10 Aug, 2020 04:38 PM

 

Published : 10 Aug 2020 04:38 PM
Last Updated : 10 Aug 2020 04:38 PM

முடிவுக்கு வருகிறதா ராஜஸ்தான் அரசியல் சிக்கல்? அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ராகுல், பிரியங்காவுடன் திடீர் சந்திப்பு

அசோக் கெலாட், ராகுல் காந்தி, சச்சின் பைலட், பிரியங்கா காந்தி: கோப்புப் படம்.

புதுடெல்லி

ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூட இருக்கும் நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி இருவரையும் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.

காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்தார்.

சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட 3 முறை அரசு சார்பில் கடிதம் அளித்தும் அதை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திருப்பி அனுப்பினார்.

4-வது முறையாக அமைச்சரவை அனுப்பிய கடிதத்தை ஏற்ற ஆளுநர் மிஸ்ரா, ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்எல்ஏக்கள் அசோல் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை காங்கிரஸ் எம்எல்ஏக்களாக அறிவித்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, அசோக் கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். இதனால் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது அசோக் கெலாட் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசியுள்ளார். ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு சுமுகமான மாற்றத்தை உருவாக்கும் என காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தரப்பில் கூறுகையில், “பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, பைலட் இடையிலான சந்திப்பு சாதகமான முறையில் அமைந்தது. அதற்காக ராஜஸ்தானில் நடந்துவரும் குழப்பத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது என அர்த்தம் இல்லை” எனவும் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் மூவருக்கு இடையே என்ன பேசப்பட்டது என்ற விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், கடந்த இரு வாரங்களாக ராஜஸ்தானில் நிலவி வரும் அரசியல் குழப்பத்துக்கு சுமுகமான தீர்வே நோக்கி இந்தப் பேச்சுவார்த்தை நகர்ந்துள்ளது. விரைவில் ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சச்சின் பைலட்டை இணைப்பது குறித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தீவிரமாக இருக்கின்றனர். இதற்கு ஏற்ப சச்சின் பைலட்டும் கட்சித் தலைமையுடன் பேசி வருகிறார். அதற்கான காய் நகர்த்தல்களும் செய்யப்பட்டு வருகின்றன என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon