Published : 10 Aug 2020 03:53 PM
Last Updated : 10 Aug 2020 03:53 PM
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை தொடர்பாக காங்கிரஸ் எம்பி.ராகுல் காந்தி கூறிய கருத்துக்கள் தேவையற்றவை, முதிர்ச்சியற்றவை, இவர்கள் ஆட்சியில் இருந்த போது மிகப்பெரிய முடிவுகளைக் கூட எந்தவிதமான ஆலோசனையின்றி எடுத்தார்கள் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது, இந்த அறிவிக்கை மீது தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 11 வரை மக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது.
ராகுல் காந்தி இன்று காலை ட்விட்டரிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் “ சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். சுற்றுச்சூழல் பேரழிவுகளை தடுக்க வேண்டும். சுற்றுச்சழல் தாக்க வரைவு அறிவிக்கையின் நோக்கம் தேசத்தை கொள்ளையடிப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் தனது வசதிபடைத்த நண்பர்களுக்காக பாஜக அரசு செய்யும் செயல், உதாரணம் சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கை” எனத் தெரிவித்திருந்தார். மேலும் ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பதிவிலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கை 2020 என்பது ஆபத்தானது, நீண்டகாலத்தில் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது அதை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்எனக் குறிப்பிட்டிருந்தார்.
உலக யானைகள் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜவடேகர் இன்று பங்கேற்றார். அப்போது, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கைக்குஎதிராகப் போராட்டம் நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கருத்துத் தெரிவித்து எதிர்வினையாற்றியுள்ளார்கள்.
எவ்வாறு அவர்களால் இந்த அறிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடியும். இது வரைவு அறிவிக்கைதானே, முழுமையான அறிவிக்கை அல்லவே. 150 நாட்களுக்கு மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
கரோனா வரைஸ் காரணமாகத்தான் 150 நாட்கள், இல்லாவிட்டால் விதிமுறைப்படி 60 நாட்கள் மட்டுமே மக்களின் கருத்துக்களைப் பெற அனுமதிக்கப்படும்.
நாங்கள் இதுவரை ஆயிரக்கணக்கான ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறோம், அது வரவேற்புக்குரியது. அந்த ஆலோசனைகளை நிச்சயம் பரிசீலிப்போம். அதன்அடிப்படையில் இறுதியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை வெளியிடப்படும்.
இப்போது இந்த சுற்றுச்சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக யாரெல்லாம் போராட விரும்புகிறார்களோ அவர்கள் தங்களின் ஆட்சியின் போது மிகப்பெரிய முடிவுகளைக் கூட எந்தவிதமான கலந்தாய்வும் இன்றி எடுத்தவர்கள்தான்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து இப்போதே ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பது தேவையில்லாதது, முதிர்ச்சியற்றது. இதுதொடர்பாக நான் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்க்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT