Published : 10 Aug 2020 02:02 PM
Last Updated : 10 Aug 2020 02:02 PM
திமுக எம்.பி. கனிமொழிக்கு சென்னை விமான நிலையத்தில் நேர்ந்த சம்பவம் வழக்கத்துக்கு மாறானது அல்ல. நான் கூட இதேபோன்ற சூழலை அதிகாரிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் சந்தித்து இருக்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் உரம், ரசாயனம் மற்றும் தனிநபர்களின் விவரங்கள் குறித்த பாதுகாப்பு மசோதா குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.பி. கனிமொழி நேற்று சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
அதில், “சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரி ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பினார். எனக்கு இந்தி தெரியாது. ஆதலால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். அதற்கு அந்த அதிகாரி, நீங்கள் இந்தியரா என்று கேட்டார்.
இந்தியனாக இருக்க இந்தி அறிந்திருக்க வேண்டும் என்று எப்போது இருந்து இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் திமுக எம்.பி. கனிமொழிக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
''சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் வழக்கத்துக்கு மாறானது அல்ல. நான் உட்பட பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
நான் தொலைபேசியில் பேசும்போது இந்தியில் பேசக்கூறி அரசு அதிகாரிகள் முதல் சாமானிய மக்கள் வரை வலியுறுத்தியுள்ளார்கள். சில நேரங்களில் நேருக்கு நேர்கூடக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.
மத்திய அரசுப் பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்.
இந்தி தெரியாத பிற மாநிலத்தார் அரசுப் பணிக்குச் செல்லும்போது விரைவாக இந்தி மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்தி மொழி தெரிந்தவர்கள் மத்திய அரசு பணிக்கும், பதவிக்கும் செல்லும்போது, ஆங்கிலத்தை ஏன் சரளமாகப் பேச, கற்க முடியாது?''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...