Published : 10 Aug 2020 01:15 PM
Last Updated : 10 Aug 2020 01:15 PM
நாட்டிலேயே முதல் முறையாக கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டத்தின் மூலம் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அதிவேக இணையதள வசதி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாகத் தேசத்துக்கு அர்ப்பணித்தார்.
சென்னையிலிருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு ரூ.1,224 கோடி மதிப்பில் கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடலுக்குள் 2,312 கி.மீ. தொலைவில் அந்தத் திட்டம் நிறைவடைந்ததையடுத்து, இன்று தேசத்துக்கு அர்ப்பணித்தார்.
புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம் இத்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேசியதாவது:
“சென்னை முதல் போர்ட்ப்ளேர், போர்ட்ப்ளேர் முதல் லிட்டில் அந்தமான், போர்ட்ப்ளேர் முதல் ஸ்வராஜ் த்வீப் என அந்தமானின் பெரும்பாலான பகுதிகளில் பிராட்பேண்ட் இணையதள வசதி இன்று முதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்தத் திட்டத்துக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் வழக்கத்தைவிட 10 மடங்கு வேகமான 100 எம்பிஎஸ் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது. இதன் மூலம் 20 மடங்கு அதிகமாக டேட்டாக்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்தத் திட்டத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்குள் முடிக்கவும் பல்வேறு சவால்கள் வந்தன. ஆனால், அனைத்தையும் முறியடித்து திட்டம் 24 மாதங்களுக்குள் நிறைவடைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய வர்த்தகத்தின் வலிமையாகவும், மையப்பகுதியாகவும் இந்தியப் பெருங்கடல் இருந்து வருகிறது. இப்போது இந்திய பசிபிக் பிராந்திய வர்தத்கத்தில் புதிய கொள்கையைப் பின்பற்றி வருவதால், நம்முடைய அந்தமான் நிகோபர் தீவுகள் மேலும் வலிமை அடையும்.
கிழக்குக் கொள்கையின்படி, கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பிற நாடுகளுடன் கடல் வர்த்தகம், வலிமையான உறவை உண்டாக்கிக் கொள்ள அந்தமான் தீவு முக்கியமானதாகும். இனிவரும் காலங்களில் மேலும் வலுவடையும்.
வரும்காலங்களில் அந்தமான் நிகோபர் தீவு மிகப்பெரிய துறைமுகமாக உருமாறும். பல்வேறு நாடுகளின் துறைமுகத்துக்குப் போட்டியளிக்கும் தொலைவில் அந்தமான் நிகோபர் தீவுகள் அமைந்துள்ளன.
இந்தக் கண்ணாடி இழைக் கேபிள் திட்டத்தின் மூலம் அந்தமான் நிகோபர் தீவு, நாட்டின் பிற பகுதிகளோடும், உலகத்தோடும் தொடர்பு கொள்ளவும், இணைந்து வாழவும் வழிவகுக்கும். ஆன்லைன் வகுப்புகள், சுற்றுலா, டெலிமெடிஸின், வங்கிச் சேவை, ஷாப்பிங் போன்றவற்றை அந்தமானில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெற முடியும்.
சுற்றுலா செல்லும் பயணிகள் இனிமேல் மிகச்சிறந்த இணையதள வசதியைப் பெறுவார்கள். எந்த சுற்றுலாத் தளத்துக்கும் அளிக்காத முன்னுரிமை அந்தமானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தமான் மக்களுக்கும் நவீன தொலைத்தொடர்பு வசதிகளை அளிக்கும் பொறுப்பு தேசத்துக்கு இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஸ்வராஜ் தீப், லாங் தீவு, ராங்கத், லிட்டில் அந்தமான், கமரோட்டா, கார் நிகோபர், கிரேட்டர் நிகோபர் ஆகிய தீவுகளுக்கு இணையதள வசதி கிடைக்கும். வினாடிக்கு 400 ஜிகாபைட் அளவு வேகத்தில் போர்ட் ப்ளேயரிலும், மற்ற பகுதிகளில் 200 ஜிகா பைட் அளவு வேகத்திலும் இணையதள வசதி கிடைக்கும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT