Published : 10 Aug 2020 12:44 PM
Last Updated : 10 Aug 2020 12:44 PM
ஹரியாணாவில் 5 பணக்கார கிராமங்கள் கரோனா நிவாரணத்துக்காக ரூ.50 கோடி நன்கொடை அளித்துள்ளன.
குருகிராமின் பல்ரா, சோனிபேட்டையின் செர்சா மற்றும் ராம்பூர், பானிபட்டின் பால் ஜாட்டன், நரநவ்லின் நாசிப்பூர் ஆகிய 5 பணக்கார கிராமங்கள் ஒன்று சேர்ந்து ரூ.50 கோடியை கோவிட் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.
பல்ரா கிராமம் ரூ.21 கோடியும், செர்சா, ராம்பூர், பால் ஜாட்டன் கிராமங்கள் முறையே ரூ.11.5 கோடி, ரூ.2.5 கோடி, மற்றும் ரூ.10.5 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் வளர்ச்சியடைந்த கிராமங்களாக உள்ளதே காரணம் என்று ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இந்த 5 கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
செர்சா கிராமத்தில் பஞ்சாயத்து உறுப்பினர் ராஜேஷ் குமார் கூறும்போது, சோனிபட்டில் தங்கள் கிராமம்தான் பணக்கார கிராமம் என்றார். பஞ்சாயத்து நிலத்தை மாநில தொழிற்துறை உள்கட்டமைப்பு ஆணையம் வாங்கியது. எந்தத் தொகைக்கு வாங்கியது என்று தெரியவில்லை, ஆனால் கிராமப் பஞ்சாயத்தில் போதிய அளவு பணம் உள்ளது அதனால் நன்கொடை அளித்தோம் என்றார்.
இந்த 5 கிராமங்களின் அதிசயம் என்னவெனில் இன்னமும் கோவிட்-19 இங்கு பரவவில்லை என்பதே. கிராமத்தினர் முகக்கவசம் இல்லாமல் கூட அலைகின்றனர்.
செர்ஸா பஞ்சாயத்துத் தலைவர் கூறும்போது, லாக்டவுன் விதிமுறைகளை நாங்கள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கிறோம். கரோனா பாதித்ததிலிருந்து கிராமத்துக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை, யாரையும் வெளியேறவும் அனுமதிக்கவில்லை, என்றார்.
ஹரியாணாவில் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,843 ஆகும். 474 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த கிராமங்கள் பணக்கார கிராமங்களாக இருந்தாலும் இன்னமும் கூட கல்வி, மின்சாரம், கழிவு நீர் வெளியேற்ற வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT