Last Updated : 10 Aug, 2020 10:58 AM

 

Published : 10 Aug 2020 10:58 AM
Last Updated : 10 Aug 2020 10:58 AM

சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கை ஆபத்தானது, பேரழிவானது;அதை எதிர்க்க வேண்டும் ராகுல் காந்தி விமர்சனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கை 2020 என்பது ஆபத்தானது, நீண்டகாலத்தில் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது அதை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது, இந்த அறிவிக்கை மீது தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 11 வரை மக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது.

இந்த சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கை 2020 குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்த அறிவிக்கையை கைவிட வேண்டும் எனக் கூறி #வித்ட்ராஇஐஏ2020 என்ற ஹேஸ்டேக்கையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார். ராகுல் காந்தி தனது பதிவில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, மிகவும் ஆபத்தானதும்கூட. இந்த வரைவு அறிக்கை என்பது, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பல ஆண்டுகளாக நடந்த போரில் நாம் பெற்ற வெற்றிகள், பல கடினமான போராட்டங்களால் பெற்ற பலன்களை திரும்பப்பெற்று, நாடுமுழுவதும், பரவலான சுற்றுச்சூழல் அழிவையும் கட்டவிழ்த்து விடக்கூடும்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளான நிலக்கரிச்சுரங்கம், மற்றும் பிற சுரங்கப்பணிகளுக்கு இனிமேல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தேவைப்படாது. நெடுஞ்சாலை, ரயில்வே இருப்புப்பாதைகள் அடர்ந்த வனப்பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சென்றால் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச்சாய்க்க வழிவகுக்கும், ஆயிரக்கணக்கான அழிவில் இருக்கும் உயிரினங்களின் வாழ்விடங்களை அழிக்கும்.

சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிக்கைக்கு பின் பயங்கரமான உண்மை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு திட்டத்தால் சுற்றுச்சூழலை அழித்துவிட்டபின், சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு செய்ய முடியும் என்பதுதான்.

சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு-2020 என்பது பேரழிவானது. சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாகப் பாதிக்கப்படும் மக்களின், சமூகத்தினரின் குரலை மவுனமாக்குகிறது.

ஒவ்வொரு இந்தியரும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடுக்கு எதிராக குரல் கொடுத்து போராட வேண்டும். சுற்றுச்சூழலைக் காக்க நமது இளைஞர்கள் எப்போதும் முன்களத்தில் நின்று போராடக்கூடியவர்கள். நமக்காக கையில்எடுத்து போராட வேண்டும்.

அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியான நம்பிக்கைகளைக் கடந்து சுற்றுச்சூழலைக் காக்க போராட வேண்டும். எதுவும் செய்யாவிட்டால், கரோனா பெருந்தொற்று மனித வாழ்க்கையை எவ்வாறு பலவீனமானது என்பதை காட்டியிருக்கிறது.

லட்சக்கணக்கான இந்தியர்கள் ஏற்கெனவே விளிம்புநிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சுற்றுச்சூழல் என்பது சுருக்கமான சாதாரண வார்த்தை அல்ல, அது மக்களின் வாழ்க்கை, வாழ்வாதார விஷயம்.
சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையால் பரவலாக நீண்டகாலத்தில் சுற்றுச்சூழலில் பேரழிவுகளை நமக்கும், நம் சந்ததியினருக்கும் ஏற்படுத்தும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி இன்று காலை ட்விட்டரிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் “ சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை திரும்பப் பெற வேண்டும். சுற்றுச்சூழல் பேரழிவுகளை தடுக்க வேண்டும். சுற்றுச்சழல் தாக்க வரைவு அறிவிக்கையின் நோக்கம் தேசத்தை கொள்ளையடிப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் தனது வசதிபடைத்த நண்பர்களுக்காக பாஜக அரசு செய்யும் செயல், உதாரணம் சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x