Published : 09 Aug 2020 05:05 PM
Last Updated : 09 Aug 2020 05:05 PM
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தேசிய மகளிர் ஆணையத்திடம் 2 ஆயிரத்து 914 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018, நவம்பர் மாதத்துக்குப் பின் அதிகபட்சமாக கடந்த மாதம்தான் புகார்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாக 2,914 புகார்கள் பதிவாகின. இதில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறை தொடர்பாக 660 புகார்கள் பதிவாகின.
வாழும் உரிமை மற்றும் கண்ணியத்துடன் நடத்தப்படவில்லை என்ற பிரிவில் 774 புகார்கள் பதிவாகின. கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் அதிகமான புகார்கள் பதிவாகின. அப்போது நாட்டில் #மீடு இயக்கம் உச்சத்தில் இருந்ததால் 3,339 புகார்கள் பதிவாகின. அதன்பின் கடந்த மாதம் அதிக புகார்கள் பதிவாகியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், “பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு வந்துள்ளதால் அதிகமான புகார்கள் வருகின்றன. மகளிர் ஆணையமும் சமூக ஊடகங்களில் மிகுந்த விழிப்புடன் இருந்து வருகிறது. பெண்களிடம் இருந்து நேரடியாக மட்டுமல்லாமல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கிறோம். வாட்ஸ் அப் எண்ணில் கூட பெண்கள் தங்களின் புகார்களைப் பதிவு செய்யலாம்.
கடந்த ஜூலை மாதம் பதிவான புகார்களில் பாதிக்கும் மேலானவை உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் வந்தன. அந்த மாநிலத்தில் மட்டும் 1,461 புகார்கள் பதிவாகின. அடுத்தபடியாக டெல்லியில் 338 புகார்கள் பதிவாகின.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு அடுத்தபடியாக, குடும்ப வன்முறை தொடர்பாக அதிகமான புகார்கள் வந்துள்ளன. ஏறக்குறைய 660 புகார்கள் குடும்ப வன்முறையின் கீழ் பதிவாகின. திருமணமான பெண்களிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவது, மோசமாக நடத்துவது, கண்ணியமில்லாமல் பேசுவது தொடர்பாக 493 புகார்களும் வந்தன.
இதுதவிர போலீஸார் பரிந்துரையின் பேரில் 146 புகார்களும், சைபர் கிரைம் மூலம் 110 புகார்களும் பதிவாகின. பெண்களிடம் தவறான நடத்தை தொடர்பாக 148க்கும் அதிகமான புகார்களும், 50-க்கும் மேற்பட்ட புகார்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகவும் வந்தன.
பெண்களுக்கு எதிரான புகார்களைப் பெற்று விழிப்புடன் தேசிய மகளிர் ஆணையம் செயல்படுவதால் எந்நேரமும் பெண்கள் எங்களை அணுகலாம்’’ என்று ரேகா சர்மா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT