Last Updated : 09 Aug, 2020 03:35 PM

1  

Published : 09 Aug 2020 03:35 PM
Last Updated : 09 Aug 2020 03:35 PM

இன்ப அதிர்ச்சி: ரயிலில் தவறவிட்ட பர்ஸைக் கண்டுபிடித்து உரியவரிடம் 14 ஆண்டுகளுக்குப் பின் திருப்பிக் கொடுத்த மும்பை போலீஸார்

பிரதிநிதித்துவப் படம்.

மும்பை

மும்பை மின்சார ரயிலில் கடந்த 2006-ம் ஆண்டு ஒரு பயணி தவறவிட்ட பர்ஸைக் கண்டுபிடித்து 14 ஆண்டுகளுக்குப் பின் இப்போது அவரிடம் மும்பை போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.

நவிமும்பையில் பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் பதால்கர். கடந்த 2006-ம் ஆண்டு மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது ஹேமந்த் பதால்கர் ரயில் நிலையத்தில் தனது பர்ஸைத் தவறவிட்டார். இது தொடர்பாக ரயில்வே போலீஸாரிடம் ஹேமந்த் புகார் அளித்தார்.

ஆனால், தனது பர்ஸ் குறித்து எந்தத் தகவலும் ஹேமந்துக்கு அப்போது மட்டுமல்ல 2020 மார்ச் மாதம்வரை இல்லை. அந்த பர்ஸ் காணாமல் போனது குறித்து ஹேமந்தும் மறந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ரயில்வே போலீஸ் அதிகாரி தொலைபேசி மூலம் ஹேமந்திடம் பேசினார். ''கடந்த 2006-ம் ஆண்டு நீங்கள் ரயில் நிலையத்தில் தொலைத்த உங்கள் பர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்து பெற்றுக்கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட ஹேமந்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்ப அதிர்ச்சியாகவே இருந்துள்ளது.

ஆனால், அப்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு இருந்ததால், ரயில்வே போலீஸாரைச் சந்தித்து ஹேமந்த் அவரின் பர்ஸைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மும்பையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் வாசி பகுதியில் உள்ள ரயில்வே போலீஸாரைச் சந்தித்க ஹேமந்த் சென்றார். அங்கு அவரிடம் 14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பர்ஸ், ரூ.300 பணத்தை போலீஸார் ஒப்படைத்தனர்.

ஹேமந்திடம் பர்ஸை வழங்கிய போலஸீார்: படம் உதவி | ட்விட்டர்

அந்தச் சம்பவம் குறித்து ஹேமந்த் பதால்கர் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “2006-ம் ஆண்டு மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் என்னுடைய பர்ஸைத் தவறவிட்டேன். அதுகுறித்து அப்போது ரயில்வே போலீஸிடம் புகார் அளித்தேன். எந்தப் பயனும் இல்லை. அப்போது எனது பர்ஸில் சில கார்டுகள், ரூ.900 பணம் இருந்தது. ஆனால் 14 ஆண்டுகளுக்குப் பின் ரயில்வே போலீஸார் நான் தவறவிட்ட பர்ஸைக் கண்டுபிடித்து இப்போது திருப்பிக் கொடுத்தார்கள்.

இதில் முக்கியமானது என்னவென்றால், நான் பர்ஸைத் தவறவிட்டபோது அதில் பழைய 500 ரூபாய் நோட்டு உள்பட ரூ.900 இருந்தது. 2016-ம் ஆண்டு 500 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அந்தப் பணத்தை போலீஸார் என்னிடம் தரவில்லை.

அதற்குப் பதிலாக ரூ.300 மட்டும் கொடுத்தனர். 100 ரூபாயை தபால் செலவுக்காக எடுத்துக்கொண்டனர். செல்லாமல் போன 500 ரூபாயை மாற்றிக் கொடுக்கிறோம். அதையும் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றனர்.

நான் ரயில்வே போலீஸார் அலுவலகத்துக்குச் சென்றபோது, பலரும் தாங்கள் தவறவிட்ட பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்திருந்தார்கள். அதில் பலருடைய பணத்தில் செல்லாமல் போன ரூ.1000, ரூ.500 இருந்தது. அவர்கள் எவ்வாறு திரும்பப் பெறப்போகிறார்கள் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இருந்தாலும் எனக்கு 14 ஆண்டுகளுக்குப் பின் என்னுடைய பணமும், பர்ஸும் கிடைத்தது மகிழ்ச்சிதான்'' எனத் தெரிவித்தார்.

ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஹேமந்த் பர்ஸ் தொலைந்த சில நாட்களில் அவரிடம் பிக் பாக்கெட் அடித்தவரைக் கைது செய்து பர்ஸைக் கைப்பற்றிவிட்டோம். அதில் ரூ.900 இருந்தது. இப்போது அவரிடம் பர்ஸைத் திருப்பிக் கொடுத்து ரூ.300 பணத்தையும் அளித்தோம். செல்லாத ரூ.500 நோட்டு இருந்தது. அதை விரைவில் மாற்றிக்கொடுத்து அதையும் கொடுத்துவிடுவோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x