Published : 09 Aug 2020 10:16 AM
Last Updated : 09 Aug 2020 10:16 AM

கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து; 7 பேர் பலி: விஜயவாடாவில் பெரும் சோகம்

விஜயவாடா


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

ஆந்திர பிரதேசத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழல் காணப்படுகிறது.

இதனால் தங்கும் வசதியுள்ள பெரிய ஓட்டல்கள் மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஓட்டல்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோன்று விஜயவாடாவில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெரிய ஓட்டல் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 5 மாடி கொண்ட அந்த ஓட்டல் கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அந்த ஓட்டலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மெல்ல பரவிய தீ ஓட்டல் முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்தது. கரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர்.

அந்த ஓட்டலில் 3வது மாடியில் கரோனா தொற்று சிகிச்சையிலிருந்த நோயாளிகள் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பினர். பலர் வெளியேற முடியாமல் சிக்கி தீயிக்கு இரையாகினர்.

அந்த ஓட்டலில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது.

ஓட்டல் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x