Published : 09 Aug 2020 09:02 AM
Last Updated : 09 Aug 2020 09:02 AM
மலைகளில் அமைக்கப்பட்டுள்ள ‘டேபிள் டாப் ஓடு பாதை’ காரணமாக மங்களூருவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதே மாதிரியான பயங்கர விபத்து கோழிக்கோடிலும் நடந்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு மே 22-ம் தேதி துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 (போயிங் 737-800), காலை 6.30 மணிக்கு மங்களூரு விமான நிலைய ஓடுபாதையில் தரை தட்டியது. மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்திருந்த விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து விலகி மலையடி வாரத்தில் விழுந்து இரண்டாக சிதறியது. விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 158 பேர் உயிரிழந்தனர்.
அந்த விமானத்தின் விமானி லேட்கோ குளூசிகா ஓடுபாதையில் சரியாக இறங்கும் இடத்தை தவற விட்டதாலே விபத்து ஏற்பட்டது. ஓடுபாதை முடிய கொஞ்ச தூரம் மட்டுமே இருந்த நிலையில்விமானத்தை தரையிறக்கியதால் பிரேக் உள்ளிட்டவை பயன்படாமல் போக, விமானம் ஓடுபாதையை கடந்து விழுந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. அப்போதே விமானிகள் சங்கத்
தினர் மங்களூரு விமான நிலையத்தின் டேபிள் டாப் ஓடுபாதை அளவில் சிறியதாக இருந்ததும் விபத்துக்கு காரணம் என்று தெரிவித்தனர்.
மங்களூரு கோர விபத்தை போலவே கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் விபத்தை சந்தித்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்த விமான நிலையமும் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அமைந்துள்ளது. இதன் ஓடுபாதையும் மலைகளை சமன் செய்து, ’டேபிள்டாப்’ மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது. மழை, பனி காலத்தில் குறுகிய தூரமுள்ள வழவழப்பான ஓடுபாதையில் விமானத்தைதரையிறக்குவது மிகவும் கடினம்.
குறைந்த தூரமுள்ள இந்த ஓடுபாதையில் விமானி துல்லியமாக விமானத்தை தரையிறக்க வேண்டிய புள்ளியை தவற விட்டால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது என்று 2011-ம் ஆண்டு மோகன் ரங்கநாதன் குழு எச்சரித்துள்ளது.
எனினும், கோழிக்கோடு விமான நிலைய நிர்வாகம் அதனை பொருட்படுத்தவில்லை. அதனால் குறுகிய தூரமுள்ள டேபிள் டாப் ஓடுபாதையில் மழைகாலத்தில் தரை இறக்கியதால் ஏர் இந்தியா விமானம் இரண் டாக சிதறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய தீபக் வசந்த் சாத்தே விமான படையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். டேபிள் டாப் ஓடுதளத்தில் 27முறை விமானத்தை தரையிறக்கிய அனுபவம் உள்ளவர். அவராலே அந்த விமான ஓடு பாதையை கணித்து தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
‘டேபிள் டாப் ஓடுபாதை’ என்றால் என்ன?
பொதுவாக விமான நிலையங்கள் சமதள நிலப்பரப்புகளில் அமைக்கப்படுகின்றன. ஒரு சர்வதேச விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு சுமார் 9 ஆயிரம் அடி கொண்ட சமதள ஓடுபாதை தேவைப்படுகிறது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளம் 14 ஆயிரத்து 534 அடிகள் கொண்டது. மழை காலங்களில் இவ்வளவு நீளமான ஓடு பாதையிலேயே மிகவும் நிதானமாக திட்டமிடப்பட்டே விமானங்கள் தரையிறக்கப்படுகின்றன.
போதுமான சமதள நிலப்பரப்பு இல்லாத இடங்களில் உயரமான மலைப் பகுதிகளில் குன்றுகளை சமன் செய்து, டேபிளை போல உயர்த்தி ஓடு பாதைகள் அமைக்கப்படுகின்றன. இத்தகைய விமான ஓடுபாதை ‘டேபிள் டாப்’ என்று அழைக்கப்படுகிறது. மங்களூரு,கோழிக்கோடு ஆகிய இரு விமான நிலையத்தின் ஓடு பாதைகளும் மலைகளை சமன் செய்து உருவாக்கப்பட்ட டேபிள் டாப் ஓடுபாதைகள்தான்.
மங்களூரு, கோழிக்கோடு, பாட்னா, சிம்லா, ஜம்மு, குலு உட்பட நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட டேபிள் டாப் ஓடுபாதை கொண்ட விமான நிலையங்கள் இருக்கின்றன. இவற்றின் ஓடு பாதை 6,410 முதல் அதிகபட்சமாக 8,900 அடி நீளம் மட்டுமே. இந்த குறுகிய ஓடுபாதைகளில் விமானத்தை டேக் ஆஃப் செய்வதற்கும், லேண்டிங் செய்வதற்கும் அனுபவம் வாய்ந்த விமானிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் மேகமூட்டம், பனி காலம், மழை காலங்களில் அனுபவம் வாய்ந்தவர்களாலே இந்த ஓடு பாதைகளில் விமானத்தை சரியாக தரையிறக்க முடியாமல் விபத்து நேரிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT