Published : 08 Aug 2020 08:57 PM
Last Updated : 08 Aug 2020 08:57 PM
விமானப் பயணம் என்றாலே சவாலானதுதான், அதிலும் குறுகிய ஓடுதளம், விரைவான டேக்ஆப், லேண்டிங் இருக்கும் டேபிள்டாப் ரன்வேயில் விமானத்தைச் செலுத்துவதும், இறக்குவதும் கத்திமீது நடப்பதுபோலத்தான். கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் டேபிள்டாப் ரன்வே இருக்கும்.
இருப்பினும் இந்தியாவில் இதுபோன்ற டேபிள்டாப் ரன்வே கொண்ட 5 விமானநிலையங்கள் இருக்கின்றன. விமானிகள் இந்த சாகசமான பயணத்தை ரசித்துத்தான் விமானத்தை இயக்குகிறார்கள். ஆனால் சில நேரங்களில் கவனம் தவறும்போது கோழிக்கோடு விமானநிலையத்திலும் மங்களூருவில் நடந்த விபத்தைப் போல் நடந்து விடுகிறது.
துபாயிலிருந்து நேற்று வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியதும் இந்த டேபிள்டாப் ஓடுதளத்தில்தான். ஆனால், அதிர்ஷ்டவசமாக 190 பேர் பயணித்ததில் பெரும்பாலானவர்கள் காயத்துடனே தப்பித்தார்கள், இரு விமானிகள் உள்பட 18 பேர் பலியாகியுள்ளார்கள்.
விமானத்தின் கேப்டன் தீபக் சாத் 36 ஆண்டுகள் அனுபவமானவர், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக இருந்தவராக இருந்தாலும், டேபிள்டாப் ஓடுதளம் அனைவரையும் மிரட்டிப்பார்க்கும் ஓடுதளமாகும்.
கடந்த10 ஆண்டுகளி்ல் இந்தியாவில் நடந்த இரு விமான விபத்துகளும் டேபிள்டாப் ரன் கொண்ட விமான நிலையங்களில்தான் நடந்துள்ளது.
'டேபிள்டாப் ரன்வே' என்றால் என்ன
டேபிள்டாப் ரன்வே என்பது உயரமான பகுதிகளிலும், மலைப்பாங்கான நகரங்களிலும் அமைக்கப்படும் ஓடுதளமாகும். இந்த ஓடுதளத்தில் வழக்கமான ஓடுதளத்தில் இருக்கும் நீளத்தைவிட மிகக்குறைவாக இருக்கும்
இதனால் விமானத்தை டேக் ஆப் செய்யும்போது விரைவாக விமானத்தை மேலே எழுப்ப வேண்டும். அதாவது வேகத்தை தொடக்கத்திலிருந்தே அதிகப்படுத்தி மேலே பறக்க வேண்டும்.
விமானத்தை தரையிறக்கும்போது ஓடுதளம் நீளம் குறைவு என்பதால், நீண்டதொலைவு விமானத்தை ஓடவிடாமல் விமானம் இறங்கும்போதே வேகத்தை குறைத்துக்கொண்டே வந்து விமானத்தை நிறுத்த வேண்டும். விமானத்தை தரையிறக்குவதும், டேக்ஆஃப் செய்வதும் டேபிள்டாப் ஓடுதளத்தில் மிகுந்த சவாலானதாகும்.
கோழிக்கோடு விமானநிலையத்திலும் இதுபோன்ற டேபிள்டாப் ஓடுதளம்தான் இருக்கிறது. இந்த விமானநிலையத்தில் தரையிறங்கும்போது ஏற்பட்ட சிக்கலில்தான் விமானம் விபத்துக்குள்ளானது.
மொத்தம் எத்தனை
இந்தியாவில் மொத்தம் 5 விமானநிலையங்களில் டேபிள்டாப் ஓடுதளங்கள் இருக்கின்றன. இதில் கோழிக்கோடு, மங்களூரு, சிம்லா, பாக்யாங்(சிக்கிம்) ஆகிய 4 விமானநிலையங்களும் இந்திய விமான ஆணையத்தால் நடத்தப்படுபவை.
மிசோரமில் உள்ள லெங்பு விமானநிலையத்திலும் டேபிள்டாப் ஓடுதளம் இருக்கிறது என்றாலம், அது மாநில அரசால் நடத்தப்படுகிறது. மொத்தம் இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஆணையம் மூலம் நாட்டில் 137 விமானநிலையங்கள் நடத்தப்படுகின்றன.
சவாலானதா டேபிள்டாப் ஓடுதளம்
ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ டேபிள்டாப் ஓடுதளத்தில் விமானம் டேக் ஆஃப் செய்யும் போதும், தரையிறங்கும் விமானத்தை ஆட்டோமேஷன் பிரிவில் செயல்படுத்துவது முடியாது. விமானியின் முழுக்கட்டுப்பாட்டில் விமானம் இருந்தால்தான் தரையிறக்கவோ, பறக்கவோ முடியும்.
அதுமட்டுமல்லாமல் டேபிள்டாப் ஓடுதளத்தில் பார்வை மாயை அதாவது பிம்ப மாயையும் ஏற்படும்.
அதாவது விமானநிலையத்துக்கு அருகே வரும்போது ஓடுதளம் அருகே வந்துவிட்டது போன்ற பிம்பத்தை உருவாக்கும். அதை நம்பி விமானத்தை தாழ்வாக விமானி விமானத்தை பறக்கவிட்டால் விபத்தில் சிக்கிவிடுவார்கள்.
இந்த பிரச்சினையும் டேபிள்டாப் ஓடுதளத்தில் இருக்கிறது. உண்மையில் ஓடுதளம் வெகுதொலைவில் இருக்கும் ஆனால், விமானிக்கு அருகே இருப்பது போன்ற தோற்றத்தை டேபிள்டாப் ஓடுதளம் ஏற்படுத்தும்.
வழக்கமான ஓடுதளம் போன்று டேபிள்டாப் ரன்வே இருக்காது என்பதால், டேக்ஆஃப் செய்யும் போதும், தரையிறங்கும்போதும் விமானி மிகுந்த அழுத்தத்தைச் சந்திப்பார்.
உலகில்பல்வேறு நாடுகளில் இந்த டேபிள்டாப் ஓடுதளம் இருக்கிறது. அங்கெல்லாம் ஓடுதளம் நீளம் மிகக்குறைவாகத்தான் இருக்கும். இதனால் விமானத்தை தரையிறக்குவதும், பறப்பதிலும் சி்க்கல் இருக்கும், விமானிக்கு சவாலானதாகவே இருக்கும்.
கோழிக்கோடு விமானநிலைய டேபிள்டாப் ஓடுதளம் 9 ஆயிரம் அடி நீளம் கொண்டது. மற்ற டேபிள்டாப் ஓடுதளத்தைவிட சற்று நீளமானதுதான். இந்த ஓடுதளத்தில் விமானிகள் விமானத்தை இயக்கும்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன்தான் இயக்க அனுமதிக்கப்படுவார்கள்.
2010-ம் ஆண்டு மங்களூரு விமானநிலையத்தில் நிகழ்ந்த விபத்துக்கும் டேபிள்டாப் ஓடுதளம் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. குறுகலான இடம், குறைந்த நீள ஓடுதளம் போன்றவை விமானிகளுக்கு சவாலாகவும், கூடுதல்திறமையும், அதிகமான முன்னெச்சரிக்கையும் விமானங்களுக்கு தேவை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது
பெரும்பாலும் விமான விபத்துகள் தரையிறங்கும் போதும், பறக்கும்போதும்தான் ஏற்படுகிறது. அதிலும் டேபிள்டாப் ஓடுதளம் சாய்தளத்தில் இருப்பதால், விமானத்தின் வேகத்தை பறக்கும் போதும், தரையிறக்கும் போதும் கவனத்துடன் கையாள வேண்டும்.. கோழிக்கோடு விமான விபத்தில்கூட 1000 அடி உயரத்தில் பறந்தபோதே தரையிறங்க விமானி முயற்சித்துள்ளார். அதனால்தான் விமானத்தை கட்டுபடுத்தமுடியவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஏஜென்சி தகவல்களுடன் ...........
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT