Published : 08 Aug 2020 05:54 PM
Last Updated : 08 Aug 2020 05:54 PM
கோழிக்கோடு, கரிபூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான இடத்தையும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களையும் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இறந்தவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், ''பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தவிர, விமான விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் இருக்கும் மருத்துவமனைகளைப் பொருட்படுத்தாமல் சிகிச்சை செலவுகளை மாநில அரசு ஏற்கும்.
மேலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால், சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு அவர்களுக்கு ஆதரவளிக்க மாநில அரசு அந்த நேரத்தில் பொருத்தமான முடிவை எடுக்கும். எவ்வாறாயினும், விபத்தில் இருந்து தப்பியவர்களுக்குச் சிறந்த சிகிச்சையை உறுதி செய்வதே இப்போது உடனடிப் பணி. மீட்கப்பட்டவர்களுக்கு இப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள 16 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மாவட்ட ஆணையம் ஒருங்கிணைத்து வருகிறது'' என்று தெரிவித்தார்.
விபத்து நடந்த விமானத்தில் இருந்த 190 பேரில், 184 பேர் பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் ஆவர். இறந்த 18 பேரில் 14 பேர் பெரியவர்கள் (7ஆண்கள், 7 பெண்கள்) மற்றும் 4 குழந்தைகள். இறந்தவர்களில் பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் உள்ளனர். தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 149 பயணிகள் ஆபத்தான நிலையில் 23 பேர் உள்ளனர். 23 பயணிகள் சிகிச்சை முடிந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த சில பயணிகள் உள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர். கோவிட் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் பிரேதப் பரிசோதனை செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பரிசோனை இன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் உட்பட அனைவரும் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் நேற்று மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டன. அதனாலேயே குறைந்தபட்ச உயிர்ச்சேதத்துடன் பேரழிவு தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு விமான நிலையத்திற்கு அருகாமையில் இருந்த பொதுமக்களும், அதிகாரிகளும்தான் பெரும்பங்கு வகித்துள்ளனர். அவர்களின் சமயோசித ஆற்றலை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டினார்.
இதற்கிடையே கோழிக்கோடு வந்த ஆளுநர் ஆரிப் முகமது கான், விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT