Last Updated : 08 Aug, 2020 05:39 PM

2  

Published : 08 Aug 2020 05:39 PM
Last Updated : 08 Aug 2020 05:39 PM

குண்டும் குழியுமான ஓடுபாதை, பாதுகாப்புக் குறைபாடு: கோழிக்கோடு விமான நிலையத்துக்கு கடந்த ஆண்டே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பிய டிஜிசிஏ

விபத்துக்குள்ளாகி இருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதை தரமற்றதாகவும், குழிகள் நிரம்பியும், விரிசல் நிறைந்து காணப்பட்டதாலும், பல்வேறு இடங்களில் ரப்பர் துண்டுகள் காணப்பட்டதாலும் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு விமான நிலைய நிர்வாகத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு அனுப்பிய எச்சரிக்கை நோட்டீஸ் விவகாரம், நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகி 18 பேர் உயிரிழந்த பின்புதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737, ஐஎக்ஸ் 1344 எண் கொண்ட விமானம் துபாயிலிருந்து கோழிக்கோடு நகருக்கு நேற்று வந்தது.

கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவு 7.41 மணிக்கு விமானம் தரையிறங்கியபோது, விமானியின் கட்டுப்பாட்டை மீறி ஓடு பாதையிலிருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விமானம் இரண்டாகப் பிளந்தது. இந்த விமான விபத்தில் பயணம் செய்த 190 பயணிகளில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை என்பது டேபிள்டாப் என்ற அமைப்பின்படி அமைக்கப்பட்டதாகும். அதாவது ஓடுபாதை என்பது குறுகிய தொலைவுதான் இருக்கும். அந்தக் குறுகிய தொலைவுக்குள் விமானத்தைச் செலுத்தி டேக் ஆஃப் செய்யவும், லேண்டிங் செய்யவும் விமானிக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை தரமற்றதாகவும், விரிசல்கள் நிறைந்ததாகவும், ரப்பர் குப்பைகள் ஆங்காங்கே இருந்ததாகவும் குறிப்பிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் விமான நிலைய நிர்வாகத்துக்கு விமானக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநரகம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி சவுதி அரேபியாவின் தம்மாம் நகரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியபோது சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் கோழிக்கோடு விமான நிலையத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் ஓடுபாதையில் ஏராளமான விரிசல்கள், குழிகள் இருந்ததையும், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதையும், ஏராளமான ரப்பர் துண்டுகள் பல்வேறு குப்பைகள் சிதறிக் கிடந்ததையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கோழிக்கோடு விமான நிலைய இயக்குநர் கே.ஸ்ரீனிவாச ராவுக்கு எச்சரிக்கை நோட்டீஸும் வழங்கப்பட்டது. ஆனால், வெறும் கண்டிப்புடன் நிறுத்கிக கொண்ட அதிகாரிகள் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்தனர்.

ஆகவே, கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த ஆண்டே பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பாக விமானப் பாதுகாப்புத் துறை இயக்குநரகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், கோழிக்கோடு விமான நிலையமும், ஓடுபாதையும் மிகவும் அழகானது என்று புகழாரம் சூட்டியதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ''இந்தியாவின் சிறந்த விமான நிலையங்கள், ஓடுபாதைகள் என்று பட்டியலிடும்போது, கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தையும், ஓடுபாதையையும் குறிப்பிட வேண்டும்.

மலப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், கோழிக்கோட்டிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் இருக்கும் கரிப்பூர் விமான நிலையம்தான் காலிகட் (கோழிக்கோடு) விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் 3 டேபிள்டாப் ஓடுதளம் இருக்கிறது. உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்படும் இந்த டேபிள்டாப் ஓடுபாதைகள் விமானிகளுக்கு மிகவும் சவாலானது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x