Published : 08 Aug 2020 03:52 PM
Last Updated : 08 Aug 2020 03:52 PM
கேரள மாநிலம், இடுக்கிமாவட்டம், மூணாறு ராஜமலை பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் 22 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன, 46-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும், பனிமூட்டம் நிலவுவதால் பேரிடர் மீட்புப்படையினர் வந்தபோதிலும் தேடுதலையும், மீட்புப்பணியை விரைவுப்படுத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 3 நாட்களாக கொட்டித் தீர்த்துவருகிறது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே கனமழை விடாது பெய்து வருகிறது.
மூணாறு கிராமப் பஞ்சாயத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் ராஜமலை செல்லும் பகுதியில் பெட்டிமடா பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
நேமக்கடா பகுதியில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர், போலீஸார், பேரிடர் மீட்புப்படையினர் வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நிலச்சரிவு நடந்த பகுதியில் நேற்று கனமழை பெய்ததாலும், மீட்பு வாகனங்கள் செல்லமுடியாததாலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
பாறைகளும், மண்ணும் சேர்ந்து 20 வீடுகளையும் மூடின. பெரிய பாறைக் கற்கள் வீடுகள் மீது விழுந்து உருண்டு சென்றுள்ளன. நிலச்சரிவு நடந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக, பெரிய பாறைக்கற்களும் கிடக்கின்றன. இதனால் மண் அள்ளும் எந்திரமும் மீட்புப்பணியில் ஈடுபடுவதில் சி்க்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் நேற்றுவரை 20 உடல்களை பேரிடர் மீட்புப்படையினர் மீட்டநிலையில் இன்று காலை மேலும் 2 உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷ் கூறுகையில்,” தேசிய பேரிடர் மீட்புப் குழுவின் இரு பிரிவினர் இன்று காலை முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 46-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
எத்தனைபேர் நிலச்சரிவு நடந்த இடத்தில் குடியிருந்தார்கள் என்பது முழுமையாகத் தெரியவில்லை. மாவட்ட அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி 46 பேரைக் காணவில்லை. ஆனால் அதிகமானோர் தங்கி இருந்ததாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் “ எனத் தெரிவித்தார்.
தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் கூறுகையில் “ தேசியபேரிடர் மீட்புக்குழுவின் இரு பிரிவுகள், போலீஸார், தீயணைப்பு படையினர் அனைவரும் சேர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை, மழை, பனிமூட்டத்தில் மீட்புப்பணியை துரிதமாகச் செய்ய முடியவில்லை. நிலச்சரிவு நடந்த பகுதியில் மின்சாரமும் இல்லை, தொலைத்தொடர்பு வசதியும் பாதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து இதுவரை 51 பேர் மழைக்கு பலியாகியுள்ளார்கள். இதற்கிடையே இடுக்கி, வயநாடு, திருச்சூர், பாலக்காடு,பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் கோழிக்கோடு வடகராவில் மட்டும் 32.7 செ.மீ மழை பதிவானது. வயநாட்டின் வைத்திரியில் 19.3 செ.மீ மழையும், இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் 18.5 செ.மீ மழையும் பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT